``மோடி அரசின் வகுப்புவாத கொள்கையின் அடையாளமே ராம ராஜ்ஜிய ரத யாத்திரை"- தா.பாண்டியன்

தா.பாண்டியன்

``மோடி அரசின் வகுப்புவாதக் கொள்கையின்அடையாளமே ராம ராஜ்ஜிய ரத யாத்திரை" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி, வில்லியனூரில் சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழக மகளிர் அணியினர் நடத்திய பொதுக்கூட்ட மேடையில் செருப்பு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பாஜகவினருக்கும், தி.கவினருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ``பொதுக்கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், புதுச்சேரி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் சிவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், ``பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததிலிருந்து வகுப்பு வாத கொள்கைகளை அரசியல் பின் புலத்தோடு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர பார்க்கிறது. அதன் ஓர் அடையாளம்தான் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை. ரத யாத்திரை மோடி ஆட்சியை விளக்குவதற்காகவா? அல்லது பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை அழிப்பதற்காகவா? உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டுமல்லாமல், அரசியல் ரீதியில் இந்தியாவில் தமிழகம் ஒரு பகுதிதானா என்பதற்கும் பதில் தேடுவோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!