வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/03/2018)

கடைசி தொடர்பு:22:00 (21/03/2018)

அம்மன் அருளால் பிறந்த குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை!

குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் விழா நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனுக்கு மேற்கே 500 மீட்டர் தூரத்தில் வட்டவிளையில் மூலக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் அம்மன் காட்சி தருவார். கண்ணனாகத்துக்குக் கிழக்கே 500 மீட்டர் தூரத்தில் வெங்கஞ்சியில் உள்ள கோயிலில் திருவிழா காலங்களில் மட்டும் அம்மன் காட்சி அருளுவார். ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தூக்கத் திருவிழா நடைபெறுகிறது. மூலக் கோயிலிலிருந்து தூக்கத் திருவிழாவுக்காக ஸ்ரீபத்திரகாளி அம்மன் வெங்கஞ்சியில் எழுந்தருளுகிறார். இந்த ஆண்டு பரணி கொடை விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை

10ம் நாள் விழாவான இன்று பரணிகொடை விழாவை முன்னிட்டு கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் முக்கிய நிகழ்வாக தூக்க நேர்ச்சை கோலாகலமாக நடந்தது. குழந்தை இல்லாத தம்பதிகள் இந்தக் கோயிலில் குழந்தை வரம் வேண்டுகிறார்கள். வேண்டுதல் மூலம் கிடைக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் முன் இக்கோயிலில் தூக்க நேர்ச்சை நடத்திக் கொடுக்கிறார்கள். சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், தூக்கக்காரர்கள் குழந்தைகளை கைகளில் தூக்கி வைத்துக்கொள்ள  ரதம் கோயிலை ஒருமுறை சுற்றிவரும். இந்த வழிபாடுதான் தூக்க நேர்ச்சை என அழைக்கப்படுகிறது. குழந்தைகளை வில்லி தூக்கிச்செல்லும் பக்தர்களை தூக்கக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். தூக்கக்காரர்களும் விரதமிருந்து தூக்க வில்லில் குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி கோயிலைச் சுற்றி வருகின்றனர். தூக்க வில் பொருத்தப்பட்ட தேரை பக்தர்கள் அம்மனின் திருநாமம் முழங்க இழுத்துச்சென்றனர். இந்த ஆண்டு 1547 குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது.