வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (21/03/2018)

கடைசி தொடர்பு:05:53 (22/03/2018)

``ரதயாத்திரையை நாங்கள் நடத்தவில்லை.. வீண் அரசியல் செய்யாதீர்கள்!" - வி.எச்.பி வேதாந்தம் #VikatanExclusive

ரதயாத்திரை , yatra row

உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிய `ராம ராஜ்ஜிய ரத யாத்திரை’ தமிழகத்துக்குள் நுழைந்ததும் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்தது. தொடர் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் எனப் பரபரப்பானது தமிழகம். இங்குள்ள பல அரசியல் தலைவர்கள் இந்த ரத யாத்திரைக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தவாறு போராட்டக் களத்தில் குதித்தனர். `விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. பிரிவினைவாதத்தை தமிழகத்தில் முன்னெடுக்கிறது இந்த ரதயாத்திரை’ என்பது போன்ற கருத்துகள் பொதுவாக முன்வைக்கப்பட்டன. அனல் பறக்கும் இந்த விவகாரம் தொடர்பாக அகில உலக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் அவர்களிடம் பேசினோம்… 

``வி.எச்.பி அமைப்பால் நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் இந்த ரதயாத்திரை மீதான சர்ச்சைகளைக் கவனித்தீர்களா?"

``முதலில் இங்குள்ளவர்களும், ரத யாத்திரைக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ரதயாத்திரை வி.எச்.பி அமைப்பால் நடத்தப்படவில்லை. வி.எச்.பி அமைப்புக்கு சம்பந்தமும் இல்லை. வி.எச்.பி அமைப்பில் ஈடுபாடு கொண்ட சில ஆதரவாளர்கள் இந்த ரதயாத்திரையில் ஈடுபட்டிருக்கிறார்கள்... அவ்வளவுதான். முதலில் வி.எச்.பி அமைப்பு மீது மொத்தப் பழியையும் வைத்து அரசியல் செய்வதை இவர்கள் நிறுத்த வேண்டும்." 

`` `இந்த ரதயாத்திரையால் பிரிவினைவாதம் உண்டாகிறது' என்ற கருத்துக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?"

``இந்தியா ஜனநாயக நாடு. இங்கு எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இந்த ரதயாத்திரை அவ்வளவு மோசமான செயலா என்ன... சிலர் அரசியல் லாபத்துக்காக இந்த ரத யாத்திரையை வைத்துப் பிரச்னையைக் கிளப்புகிறார்கள். இந்த ராம ராஜ்ஜிய ரதத்தால் எந்த இடைஞ்சலும் மக்களுக்கு ஏற்படவில்லை. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா என ஐந்து மாநிலங்களைக் கடந்து வந்திருக்கிறது இந்த ரதம். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவிலும் ஒரு பிரச்னையும் இல்லை, கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவிலும் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. அமைதியான முறையிலேயே ஊர்வலம் நடந்து முடிந்தது.  இங்கு மட்டும் என்ன பிரச்னை வந்தது இவர்களுக்கு?''

வேதாந்தம்

``இத்தனை கட்சிகள் ஒன்றிணைந்து ரத யாத்திரைக்கு எதிராகப் போராடுகிறார்கள்.. அதற்கு மதிப்பு தரவேண்டும்தானே?"

`` `கலவரம் வந்துவிடும். பிரிவினைவாதம்' என எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் வேலை இது. எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்காக இந்தப் போராட்டத்தை செய்கிறார்கள். உண்மையில் இவர்கள்தாம் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள். ரத யாத்திரையை எதிர்ப்பதாலும், இந்து மதத்துக்கு எதிராகச் செயல்படுவதாலும் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுவிட நினைக்கிறார்கள். ராமருக்குச் செருப்பு மாலை போடுவது, பிள்ளையார் சிலைகளைப் போட்டு உடைப்பது என ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தாம். உண்மையிலேயே இந்துமத விரோதிகள் இவர்கள். ஆரியம், திராவிடம் எனப் பிரிவினையைத் தூண்டுவதில் எப்போதுமே கவனம் செலுத்தி வருகிறார்கள்." 

`` `மத்திய அரசு, தென்னிந்தியாவைத் தொடர்ந்து புறக்கணிக்கிறது’ என்ற விமர்சனங்களின் அடிப்படையில்தானே `தனி திராவிட நாடு’ என்ற கோரிக்கைகளும் தற்போது அதிகரித்து வருகின்றன?”

``முதன்முதலில் `திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் கால்டுவெல். அதிலிருந்து இவர்கள் பிடித்துக்கொண்டார்கள். இங்கிருப்பவர்கள் கூறுவதுபோன்று ஆரியம், திராவிடம் எனத் தனித்தனி ரகம் எல்லாம் இல்லை. அனைவருமே இந்தியர்கள்தாம். ஆனால், சிலர் ஆதாயத்துக்காக `திராவிடம்’ என்ற பிரசாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தென் மாநிலங்களை `திராவிட நாடு’ எனப் பிரிக்கச் சொல்கிறார்கள். பிறகு ஏன் காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? கேரளா, கர்நாடகா மாநிலங்கள் ஏன் அணை கட்டுகின்றன....? அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையாக இருந்தபோது பிரச்னையே இல்லை. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோதுதான் இந்தப் பிரச்னை வெடித்தது. இதை ராஜாஜி அப்போதே எதிர்த்தார். `மொழிவாரியாகப் பிரிக்காதீர்கள்' என்றார். மொழி யாரையும் ஒன்றுபடுத்தாது. தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா ஒன்றாகவா இருக்கிறது? இரண்டாக உடைந்து தெலங்கானா பிரிந்துவிட்டதே.... அனைத்துக்கும் தேசிய உணர்வுதான் அடிப்படை." 

``கடந்த 25 வருடங்களாக இல்லாத இந்த ரத யாத்திரை தமிழகத்துக்கு இப்போது அவசியம்தானா?"

``இங்கு எல்லோருக்குமே தனித்தனி உரிமைகள் இருக்கிறதே... மற்ற மதத்தினரின் கொள்கைகளில், மத ஊர்வலங்களில் இவர்கள் இப்படித்தான் தலையிடுவார்களா? `ராம ராஜ்ஜிய ரத யாத்திரை'க்கு மட்டும் இத்தனை போராட்டங்கள் ஏன்? இந்த ரத யாத்திரையை இங்குள்ளவர்கள் தடுப்பதற்கு முழுக்காரணம் தி.மு.க-தான். அந்தக் கட்சிக்குத் தோல்வி மனப்பான்மை அதிகரித்துவிட்டது. ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்தது உட்பட அவர்களுக்குத் தோல்விமுகம்தான். இந்த ரத யாத்திரையை வைத்து ஆதாயம் தேடுவதற்காக தி.மு.க-தான் வன்முறையைத் தூண்டுகிறது. அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அரசியல் சுயலாபத்துக்காக இதைச் செய்கிறார். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டு பாதுகாக்கிறது." 

வேதாந்தம்

``ரத யாத்திரைக்கு எதிராக தி.மு.க மட்டுமன்றி, பல கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் குதித்திருக்கின்றனவே?"

``போராடும் அனைவரும் ஒரே கூட்டணிதான். ரத யாத்திரைக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த சீமான் ஒரு கிறிஸ்துவர். இவர்கள் போராட்டத்துக்குக் கிறிஸ்துவ அமைப்புகளும்தாம் காரணம். பிரிவினைக்கு வித்திடும் போராட்டங்கள் இவை. பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள் இவர்கள். 700 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் ஆண்டார்கள்… 200 வருடங்களாக கிறிஸ்துவர்கள் ஆண்டார்கள்... இப்போதுதான் நம்மை நாம் ஆள்கிறோம். அது பொறுக்காத சிலர் பார்க்கும் வேலைதான் இது. வெளிநாட்டுச் சக்திகளும் இதற்கு உடந்தை."  

  ``இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ரத யாத்திரை எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம்தானே?”

``இது பிரதமர் மோடிக்கு எதிராகச் சிலர் செய்யும் விஷமப் பிரசாரம். இஸ்லாமியப் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். பர்தா அணிவது முதல் முத்தலாக் வரை அனைத்துக்கும் சில மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கிறார் மோடி. அதற்கு எதிராக நடப்பவர்கள் கிளப்பி விடும் பொய் பிரசாரம் இவை. சிறுபான்மையினர் இங்கு பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். உண்மையில் பொய் பிரசாரம் செய்யும் இவர்கள்தாம் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிராகச் செயல்படுகிறார்கள். பிரிவினைவாதத்தையும், வன்முறையையும் தூண்டும் இவர்களின் பேச்சுகளுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையைச் சொன்னால் இஸ்லாமியர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. இவர்களின் வாக்குகளுக்காகவே இங்குள்ள கட்சிகளும் அவர்கள் பின்னால் போகின்றன. அதனால்தான் இந்த ரத யாத்திரை எதிர்ப்பு எனும் விவகாரத்தைக் கையில் எடுத்து ஆர்ப்பரிக்கிறார்கள்."


டிரெண்டிங் @ விகடன்