வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (21/03/2018)

கடைசி தொடர்பு:19:17 (21/03/2018)

`சென்னையில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயற்சி!’ - பதறிய டி.ஜி.பி. அலுவலகம்

சென்னையிலுள்ள டி.ஜி.பி அலுவலகத்தின் முன் காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டத்தில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றிவரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். அதன்பின்னர், வெளியேவந்த அவர்கள் திடீரென மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர். தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றியபோது, சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், காரணமில்லாமல் தங்களைப்  பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்களிடம், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆயுதப் படை ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோரைக் கண்டித்து பார்வார்டு ப்ளாக் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக,  காவலர்கள் தற்கொலை விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'காதல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்கள் காரணமாகத் தான், காவலர்கள் தற்கொலை நடைபெற்றுள்ளது' என்று கூறியிருந்தார். இந்தநிலையில், டி.ஜி.பி அலுவலகத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.