வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/03/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/03/2018)

`இடமாறுதலால் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்!’ - தீக்குளிக்க முயன்ற காவலர் கணேசன் வேதனை

இடமாறுதலால் எனக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்கள் என டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற காவலர் கணேசன், பரபரப்பான தகவலைத் தெரிவித்துள்ளார். 

 

தேனிமாவட்ட ஆயுதப்படை பிரிவில் முதலாம் படையில் காவலராகப் பணியாற்றுபவர் கணேசன். இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இன்று மாலை வந்தார். அங்கு, பரபரப்பான புகார் மனுவைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் 18.10.2013ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றிவருகிறேன். தற்போது தேனி மாவட்ட ஆயுதப்படையில் முதலாம் படை பிரிவில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றுகிறேன். அதற்கு முன்பு நீலகிரி மாவட்ட ஆயுதப்படையில் நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்தேன். சுழற்சி முறையில் பணிமாறுதலாகி எனது சொந்த மாவட்டமான தேனிக்கு வந்தேன். அங்கு நல்ல முறையில் பணியாற்றி வந்த சமயத்தில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் திடீரென ராமநாதபுரம் மாவட்டத்துக்கு என்னை இடம் மாற்றினார்கள். இதற்கு எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள்தான் காரணம்.

சாதி காரணமாகத்தான் நான் இடமாற்றப்பட்டேன். இதற்கு முன்பு என்னுடன் பணியாற்றிய காவலர் ஒருவரும் இன்ஸ்பெக்டரால் பழிவாங்கப்பட்டுள்ளார். அப்போது, அவர் பணியிலிருக்கும்போது, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதுபோல நானும் தற்கொலை செய்து கொண்டால் இன்ஸ்பெக்டர் நிம்மதியடைவார். தற்கொலை செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். மேலும், எனக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் இடமாறுதலால் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரால் மிகவும் மனஉளைச்சல் அடைந்துள்ளேன். என்னை இடமாற்றியது சாதி அடிப்படையிலானது. எனவே, என்னுடைய இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைப்போல ஆயுதப்படை காவலர் ரகுவும் டி.ஜி.பி அலுவலகத்தில் மனு கொடுத்தார். மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த இவர்கள் இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியில் உள்ள காவலர்கள் தடுத்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவலர்கள் தற்கொலைக்கு அவர்களது சொந்தக் காரணம் என்று கூறிய நிலையில், இரண்டு காவலர்கள் டி.ஜி.பி. அலுவலகத்திலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.