வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (21/03/2018)

கடைசி தொடர்பு:22:40 (21/03/2018)

``கோவை பழைய சரித்திரத்துக்குத் திரும்பிவிடக் கூடாது!” - எச்சரிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி.ராதாகிருஷ்ணன்

மாநில அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும்    மாற்றிக்கொள்ள வேண்டும் என்று  மத்திய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பி.ஜே.பி  மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு வந்து பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கயிறு வாரிய தலைவரும், பி.ஜே.பியின் தேசியச் செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன், “கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு’ சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருப்பது கடந்தகால சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. எவ்வளவு பெரிய தவறுகளை செய்தாலும் போலீஸிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கிற  பாதுகாப்பு உணர்வை தீவிரவாதிகளுக்கு சில அரசியல்கட்சிகள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. அதனாலேயே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துகொண்டேயிருக்கிறது. எனவே, போலீஸார் இந்த வழக்கில் விசாரணையை முடுக்கிவிட்டு, இந்தச் செயலை செய்தவர்களையும், அடுத்தடுத்து இதுபோன்ற செயல்களை  செய்ய திட்டமிட்டிருப்பவர்களையும் உடனடியாகக்  கைது செய்ய வேண்டும். 

திருமாவளவன், வைகோ, ஸ்டாலின் ஆகியோர் வன்முறையை ஆதரித்தாலும் போலீஸார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குறிப்பாக பழைய சரித்திரத்திற்க்கு கோவை திரும்பி விடக்கூடாது.  ரத யாத்திரை பல இடங்களுக்குச் சென்றும் தமிழகத்திற்கு வந்தால் பிரச்னை வரும் என்றும் சொல்வதன் மூலம் மதவாத சக்திகள் பின்னால் தி.மு.க இருப்பதைதான் காட்டுகிறது, இதனால், அவர்கள்  சுவடு இல்லாமல் போய்விடுவார்கள். வன்முறையை யார் செய்தாலும் அது தவறுதான். நடுநிலையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இருப்பது அரசு ஒத்துழைப்புதான் உள்ளது. அது  அரசியல் ஒத்துழைப்பு கிடையாது' என்றார்.