சமூக ஆர்வம் கொண்ட 1000 இளைஞர்கள் தமிழகத்தை மாற்ற வருகிறார்களா?

இளைஞர்கள்

``100 இளைஞர்களைக் கொடுங்கள்; நாட்டை மாற்றிக் காட்டுகிறேன்" என்று விவேகானந்தர் அன்று சொன்னார். அதே, வழியில் இன்று 1,000 இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து தமிழகத்தின் சமூக மாற்றத்துக்காகக் களமிறங்குகிறார்கள்.

இன்று (21.03.2018) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் `நல்லோர் வட்டம்' சார்பில் `மூன்றாவது சக்தி' என்ற அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இந்தக் கூட்டத்தில், அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கலந்துகொண்டு பேசினர். அதில், நல்லோர் வட்டத்தைச் சேர்ந்த பால சுப்பிரமணியன், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன், வழக்கறிஞர் சிவக்குமார், ராஜேஷ்வரி, விடுதலை அமைப்பைச் சேர்ந்த அன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், ``1000 இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணையும் கூட்டத்தில் தமிழகத்தில் சமூக மாற்றத்தைக் கட்டமைக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. தமிழகத்தில் இருக்கும் கட்டமைப்பை முறையாகப் பயன்படுத்தாத நிலையில், அந்தக் கட்டமைப்பை முறையாகப் பயன்படுத்துவதே `மூன்றாம் சக்தி'யின் செயல் வடிவம். மக்கள் சக்தியை உணரவும், உணர்த்தவும்தான் SRM பல்கலைக்கழத்தில் வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு 1000 பேர் கூடுகிறோம். அனைவரும் அவரவர் சொந்தச் செலவில்தான் வருகிறார்கள். அனைவரும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் கொண்டவர்கள். சமூக அக்கறை உள்ளவரைகளைத் தேடித்தான் ஒன்றிணைத்துள்ளோம். இவர்கள் லட்சக்கணக்கானோருக்கு வழிகாட்டியாகத் திகழ்வார்கள். மருத்துவம், கிராம சபை முறையாகச் செயல்படுத்துதல், மாணவர்களின் திறமைகளைக் கண்டறிதல் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தவும், அதற்காக திட்டமிடவும், அறிவிக்கவுமே இந்தச் சந்திப்பு நிகழவிருக்கிறது. பிரிந்து உள்ள சமூக அக்கறை கொண்டவர்கள், ஒன்று சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவதற்காகவே இந்தச் சந்திப்பு" என்றனர்.

இவர்கள், டாக்டர் அப்துல்கலாம் சொன்னதுபோல 2020- ம் ஆண்டு இந்தியா வல்லரசாக மாறும் என்பதில் நம்பிக்கை கொண்டு செயல்படுகிறார்கள். "ஒரே எண்ணம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தில் மாற்றம் உண்டாகும்" என்று இவர்கள் சொல்வதை நாமும் நம்புவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!