உணவுக்காகத் தமிழகம், ஆந்திராவில் நடந்த கொலைகள்! சைக்கோவின் திகில் கதை | Psycho killer arrested by Andhra police

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (21/03/2018)

கடைசி தொடர்பு:06:38 (22/03/2018)

உணவுக்காகத் தமிழகம், ஆந்திராவில் நடந்த கொலைகள்! சைக்கோவின் திகில் கதை

குழந்தை உட்பட 8 பெண்களைக் கொலை செய்த தமிழகத்தை சேர்ந்த சைக்கோ கொலையாளியை ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர். 

சைக்கோ கொலையாளியைக் கைது செய்தது குறித்து தெரிவித்த சித்தூர் எஸ்.பி.ராஜசேகரபாபு கூறுகையில், '2017 டிசம்பர் மாதம் சித்தூர் அடுத்த நகரி பகுதியைச் சேர்ந்த ரத்தினம்மாள் என்ற மூதாட்டியையும், அப்பல்ராஜ் கண்டிகைப் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டியையும் கல்லால் தாக்கி, முகம் மற்றும் உடல் பகுதிகளை வெறி நாய் கடிப்பதுபோல் கடித்து கொலை செய்துவிட்டு சென்றிருந்தனர். ஆனால், அந்த மூதாட்டிகள் அணிந்திருந்த நகை மற்றும் அவர்களது வீட்டிலிருந்த பணம் ஆகியவை திருடப்படாமல் அப்படியே இருந்தது. இந்தச் சம்பவம் எங்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கியது.

திருட வந்தால் கொலை செய்துவிட்டு நகை பணத்தை எடுத்துச் சென்றிருப்பார்கள் அது நடக்கவில்லை. இவர்களுக்கு முன்விரோதம் எதுவும் இல்லை. கொலை செய்யப்பட்ட இரண்டு மூதாட்டிகளின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த போது அதில் பதிந்திருந்த கை ரேகை ஒரே நபருடைய கை ரேகையாக இருந்தது. அதே போன்று தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் 2 வயது குழந்தை கொலை செய்தவனை வேலூர் போலீஸார் தேடிவந்தது தெரியவந்தது.

ஆந்திர எல்லையில் உள்ள சித்தூரும், தமிழக எல்லையில் உள்ள வேலூரும் இரண்டு மாநிலத்தின் பார்டர் லைன் என்பதால், வேலூர் போலீஸாரிடம் அந்தக் கொலையாளியின் கைரேகையைக் கொடுத்தோம். மூதாட்டியை கொலை செய்த கைரேகையும் குழந்தையைக் கொலை செய்த கைரேகையும் ஒத்துபோனது. அதன்பின்பு கொலையாளி வேலூர் அல்லது சித்தூரில் தான் இருக்ககூடும் என்று வேலூர் மாவட்ட போலீஸார் கொடுத்த அடையாளங்களை வைத்து தீவிரமாகத் தேடியபோது சித்தூரில் பிடிபட்டான் கொலையாளி. இவன் ஒரு சைக்கோ என்பது தெரிந்தது.

இவன் வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பதை உறுதி செய்தோம். 1992-ம் ஆண்டு முதல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற பகுதியில் திருடியதால் 10 மாதம் சிறையில் இருந்துள்ளான். அதன்பிறகு அதேபோன்று திருட்டு வழக்கில் 2000-வது ஆண்டு 10 மாதம் சிறையில் இருந்துள்ளான். அதன்பிறகு 2002-ம் ஆண்டு கொலை மற்றும் திருட்டு வழக்கில் 5 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளான்.

அதன்பிறகு வெளியே வந்த முனுசாமி, சென்ற வருடம் வேலூர் அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற மூதாட்டியையும், அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணையும், அதே போன்று திருவள்ளுரைச் சேர்ந்த 25 வயதுடைய பரிமளா என்ற பெண்ணையும் கல்லால் அடித்து வெறி நாய் போன்று கடித்துக் குதறியுள்ளான். இவர்களைக் கொலை செய்ததற்கு முக்கிய காரணம் முனுசாமி சாப்பிடுவதற்கு உணவு கேட்டுள்ளான். அவர்கள் உணவு இல்லை என்று கூறியுள்ளனர். அதனால்தான் அவர்களைக் கொலை செய்துள்ளான். மேலும், வேலூரைச் சேர்ந்த குழந்தை செல்போன் வைத்துகொண்டு விளையாடியிருக்கிறது அதை பிடுங்கியுள்ளான். குழந்தை அழவே அந்தக் குழந்தையை கொலை செய்துள்ளான். இதுவரை முனுசாமி மீது தமிழகத்தில் 28 வழக்குகள் உள்ளன' என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க