வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (21/03/2018)

கடைசி தொடர்பு:21:19 (21/03/2018)

முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராசன் உடல் நல்லடக்கம்..!

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ம.நடராசனின் உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சசிகலா கணவர் நடராசன், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் திங்கள்கிழமை நள்ளிரவு 1.35 மணிக்கு  உயிரிழந்தார். பின்னர் நடராசன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள பரிசுத்தம் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வருவதற்காக எடுத்துவரப்பட்டது. முன்னதாக அவரது மனைவி சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து 15 நாள் பரோலில் வந்தார். திருச்சி அருகே சசிகலாவிற்காக நடராசன் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலென்ஸ் காத்திருந்தது.

திருச்சி வந்தடைந்த சசிகலா, ஆம்புலன்ஸில் இருந்த நடராசன் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறினார். பின்னர், ஆம்புலன்ஸ் புறப்பட்டு தஞ்சாவூருக்கு வந்து அங்கு நடராசனுக்குச் சொந்தமான இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது. அதன் பிறகு வீட்டிற்கு வந்த சசிகலா, கணவர் நடராசன் உடல் அருகே சிறிது நேரம் இருந்து விட்டு பின்னர் மாடிக்குச் சென்றுவிட்டார். தொடர்ந்து தினகரன், திவாகரன், விவேக், வெங்கடேஷ், ஜெயானந்த் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இன்று மாலை 4.30 மணிக்கு நடராசன் உடல் சொந்தஊரான விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் எதிரே நல்லடக்கம் செய்வதற்காக  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது சடங்குகள் செய்வதற்கு அருகிலிருந்து சசிகலா சில ஆலோசனைகளை வழங்கியபடி இருந்தார். அப்போது அவர் கண்களில் நீர் வழிந்தது. நடராசன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றித்திற்கு உள்ளே சில நிமிடங்கள் வைக்கபட்டு அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து 8 அடி ஆழம், 6 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டு குழியில் நடராசன் உடல் இறக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை ஜெயலலிதாவிற்கு செய்த தேவாதி தீக்ஷுதர் மந்திரங்கள் ஓத நடராசன் தம்பி ராமச்சந்திரன் மகன் ராஜீ சடங்குகளைச் செய்தார். திவாகரன், தினகரன், பாஸ்கரன், நடராஜன் தம்பிகள் உடனிருந்தனர். அந்த இடத்தில் மணிமண்படம் கட்டுவதற்கு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க