‘இந்த தேசத்தையே காவிக்கூட்டமாக மாற்றுவோம்’ - ஈரோட்டில் கொந்தளித்த இந்து முன்னணி!

இந்து முன்னணி

'கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, ஸ்டாலின் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்' என இந்து முன்னணி அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக நடைபெறும் கிறிஸ்தவ ஜெபக் கூடங்களை மூடவேண்டியும், மதுரையில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள்மீது பொய்வழக்கு போட்டு கைதுசெய்தவர்களை விடுதலைசெய்ய வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், “ போலி மதச்சார்பின்மை பேசுகின்ற அரசும், அரசியல்வாதிகளும் 6 சதவிகித கிறிஸ்தவ ஓட்டுக்காக நாளுக்கு நாள் புற்றீசல்போல பெருகிவரும் கிறிஸ்தவ ஜெபக் கூடங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், இந்துக்களை அழித்துவருகின்றனர்” என்று முழக்கமிட்டனர். 

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “இந்தியாவில் ராம ராஜ்ஜியம் பரவிவருகிறது. ராமபிரான் மண்ணில் கிறிஸ்தவத்தைப் பரப்புகிறார்கள். கிறிஸ்தவ மதத்தின் இந்தச் செயல்களை எதிர்த்து நாம் பேசினால், காவல்துறை உடனடியாக நம்மீது வழக்குப்பதிவு செய்கிறது. ஈரோடு மாநகரிலேயே பல சர்ச்சுகள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை போலீஸாரும், அரசியல் கட்சியினரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளே காசு கொடுத்து சர்ச் கட்டச்சொல்லி மதப்பிரசாரம் செய்கிறார்கள். அதில், சோனியாதான் முக்கியமான மதமாற்ற ஏஜென்ட். 

தமிழ்நாட்டுல எஸ்றா.சற்குணம் தான் ஒட்டுமொத்த கிறிஸந்தவ அமைப்புகளுக்கும் நிதி ஆதாரமாக இருந்துவருகிறார். இவர்களையெல்லாம் மீறி, இந்த தேசத்தை நாம் காவிக்கூட்டமாக மாற்றுவோம். கடந்த தேர்தலின்போது மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தில் 90 சதவிகிதம் இந்துக்கள்தான் இருக்கிறார்கள்’ என அறிக்கை விட்டார். ஆனால், இப்போது இந்துக்களாகிய நாங்கள், ‘காவி தீவிரவாதத்தை விதைக்கிறோம்’ எனச் சொல்றார். ஸ்டாலினுக்கு கிறுக்கு புடிச்சிப் போச்சு. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தினருடைய வாக்குகளைப் பெறுவதற்காக, அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்’ எனப் பேசினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!