வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (22/03/2018)

கடைசி தொடர்பு:09:04 (22/03/2018)

வனத்தின் முக்கியத்துவம்... உறவினர்களுக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்!

உலக வன நாள் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, கோவில்பட்டி பள்ளி மாணவர்கள், "காடுகளைப் பாதுகாப்போம்.. ஆளுக்கு இரண்டு மரக்கன்றுகள் நடுவோம்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, தங்களது உறவினர்களுக்கு காடு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளனர். 

மாணவர்கள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் தேதி, உலக வன நாளாகக் கடைபிடிக்கப்படுவதையொட்டி, கோவில்பட்டி வனச்சரகம் சார்பில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட வனநாள் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள், "காடுகள், காட்டில் வாழும் உயிரினங்கள்,  மரங்களைப் பாதுகாப்போம்" என முழக்கமிட்டபடியே பேரணியாகச்  சென்றனர். 

இதேபோல, அரசு வனத்துறை மற்றும் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி பசுமைப் படை சார்பில்,  உலக வனநாள் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், "வனங்களைப் பாதுகாப்போம், வன உயிரினங்களைப் பாதுகாப்போம், மரங்களை வளர்த்து  புதிய வனங்களை உருவாக்குவோம்" என விழிப்பு உணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழியை தங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தங்களின் உறவினர்களும் கடைபிடிக்க, ஆளுக்கு 2 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வலியுறுத்தி, அஞ்சல் அட்டையில் விழிப்பு உணர்வு வாசகங்களுடன் எழுதி, அதை தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு 963 மாணவ, மாணவியர் அனுப்பினர்.

தொடர்ந்து, விழிப்பு உணர்வு பதாகையில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையெழுத்திட்டனர். மாணவ, மாணவியருக்கு வனநாள் விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. முன்னதாக, இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 103 மாணவ மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க