‘மதம் மாறினால் வீட்டுக்கு வா; இல்லைனா எங்கயோ போ’ - கணவனை விரட்டிய மனைவி..!

மதம்

“மதம் மாறச் சொல்லி என்னுடைய மனைவி மற்றும் அவருடைய உறவினர்கள் அடித்துத் துன்புறுத்துகின்றனர்” என கண்ணீரோடு இளைஞர் ஒருவர் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கூடுதலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். திருப்பூரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்துவரும் இவர், நேற்று மாலை ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்கு கண்ணீரோடு புகார் மனு ஒன்றை ஏந்திவந்தார். அந்த மனுவில், ‘நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். என்னுடைய மனைவி ஷகிலா பானு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய மதத்திற்கு மாறினால்தான் என்னை வீட்டுக்குள் அனுமதிப்பேன் என என்னுடைய மனைவி தொந்தரவுகொடுத்துவருகிறார்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பிரச்னைகுறித்து பாஸ்கரிடம் கேட்டபோது, “பள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் வேலை செய்தபோது, அங்கு வேலைபார்த்த ஷகிலா பானு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய மனைவி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எங்களுடைய திருமணம், ஈரோடு பவானி கூடுதுறையில், இந்து முறைப்படிதான் நடந்தது. திருமணத்தின் போது என்னுடைய மனைவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் உடனிருந்தனர். திருமணமாகி  ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், என்னுடைய மனைவியும் அவர்களுடைய உறவினர்களும் என்னை இஸ்லாமிய மதத்திற்கு மாறச்சொல்லி அடித்துத் துன்புறுத்துகின்றனர். என்னுடைய மனைவி அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு, ‘மதம் மாறினால்தான் வீட்டுக்குள் நுழைய அனுமதிப்பேன்’ எனக் கூறுகிறார். எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமியப் பெயர்களைத்தான்  வைத்திருக்கிறேன். என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான் உலகம் என்று இன்றைய நாள்வரை வாழ்ந்துவருகிறேன். கல்யாணத்துக்கு அப்புறம் நான் என்னோட அம்மா, அப்பாவைக்கூட பார்க்கப் போனதில்லை. இப்போ, என்னை வேணாம்னு சொன்னா, நான் எங்க போவேன். தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. திருமணமாகி  ஏழு ஆண்டுகளாக எந்தப் பிரச்னையுமில்லை. கடந்த 2 மாதமாகத்தான் என்னுடைய மனைவியின் உறவினர்கள் என்னை மதம் மாறச் சொல்லி அடித்து மிரட்டு கின்றனர்.  நான், பொண்டாட்டி புள்ளைங்களோட வாழணும்” என்று கண்ணீர் வடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!