வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (22/03/2018)

கடைசி தொடர்பு:17:43 (30/06/2018)

விளைச்சலோ அமோகம்; விலையோ கடும் சரிவு! - வேதனையில் முருங்கைக்காய் விவசாயிகள்

அன்னவாசல், பொன்னமராவதி பகுதிகளில் முருங்கைக்காய்  அமோக விளைச்சலால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முருங்கைக்காய்கள் அறுவடை செய்யாமலேயே  மரத்தில் காய்ந்து தொங்குகின்றன. இதன்காரணமாக, விவசாயிகள் புலம்பித் தவிக்கின்றனர். 


முருங்கைக்காய்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில்,  வீட்டுக்கு வீடு இரண்டு, மூன்று முருங்கை மரங்களை அப்பகுதி மக்கள் வளர்த்து வருகிறார்கள். இதுதவிர, தோப்புகளிலும் முருங்கை மரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அன்னவாசலை முருங்கைக்கு பிரபலமான அரவக்குறிச்சியுடன் ஒப்பிட்டு சிலாகிப்பார்கள். அத்துடன், இந்த ஊர் முருங்கைக்காய் சுவைக்கும் மணத்துக்கும் பெயர்பெற்றது. 


முருங்கைக்காய்

 கோடைக்காலத்தில் மாங்காயைப்போல முருங்கை விளைச்சலும் அதிகமாக இருக்கும். இந்த வருடமும் கோடைக்காலம் தொடக்கத்திலேயே முருங்கை விளைச்சல் அதிகமாகக் காணப்படுகிறது. தற்போது, அன்னவாசல் சுற்றுவட்டாரத்தில் உள்ள   முக்கண்ணாமலைப்பட்டி, செங்கப்பட்டி, சத்திரம், கீழக்குறிச்சி, சித்துப்பட்டி, காலாடிப்பட்டி, சத்திரம் மாங்குடி, குடுமியான்மலை, வயலோகம், பரம்பூர் ஆகிய ஊர்களிலும் பொன்னமராவதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  உள்ள முருங்கை மரங்களில், அதிகக் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. ஆனால், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால்,  காய்களை அறுவடை செய்யாமல் மரத்தில் அப்படியே விட்டு வைத்துவிட்டார்கள். இதனால் அப்பகுதியில் உள்ள முருங்கை மரங்களில் காய்கள் கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்குகின்றன.
ஒரு சிலர், முருங்கைக்காய்களை கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்துவருகின்றனர். இன்னும் சிலர், உறவினர்கள், நண்பர்களுக்கு போன் போட்டு வரவழைத்து, முருங்கைக்காயை இலவசமாகக் கொடுத்து அனுப்புகின்றனர். கடந்த ஒருமாதமாகவே, அந்தப் பகுதி வீடுகளில் சமைக்கப்படும் சாம்பார், காரக்குழம்பு, சொதி, கூட்டு, பொறியல், அவியல் போன்ற உணவு வகைகளில் எல்லாமே முருங்கைக்காய் மயமாகவே இருக்கிறது.


முருங்கைக்காய்

இதுகுறித்து காய்கறிக் கடை வைத்திருக்கும் வியாபாரியிடம் கேட்டோம். ''புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்கவே முருங்கைக்காய்க்கு விலை இல்லை. ஒரு முருங்கைக்காய் விலை ரூபாய் 10- க்கு விற்ற காலம் போய், இன்றைக்கு ஒரு கிலோ முருங்கைக்காய் 10-ரூபாய்க்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறோம். தக்காளி விலை மலிவாகக் கிடைத்தால், வீடுகளில் தொக்கு செய்துவிடுவார்கள். அதுபோல, எலுமிச்சை விலை சரிந்தால், ஊறுகாய் போட்டுவிடுவார்கள். முருங்கைக்காயை என்ன செய்யமுடியும்? மரத்திலேயே காய்ந்து விழ வேண்டியதுதான்" என்றார்.