வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (22/03/2018)

கடைசி தொடர்பு:10:30 (22/03/2018)

நிலக்கரி இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை!

ஒரே நாளில் 48,071 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரி இறக்குமதி செய்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. 

 தூத்துக்குடி துறைமுகம்

இதுகுறித்து துறைமுக சபை சேர்மன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியத் துறைமுகங்களில் சிறப்புப் பெற்ற தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்குப்பெட்டகம் கையாளுதல், நிலக்கரி இறக்குமதி ஆகியவற்றில் சாதனை படைத்து வருகிறது. இத்துறைமுகத்தில், முதலாவது வடக்குத்தளத்துக்கு, கடந்த 20-ம் தேதியன்று 'எம்.வி.விஸ்வ நிதி' (M.V.Vishva Nidhi) என்ற கப்பல் வந்தடைந்தது. இந்தக் கப்பலில் இருந்த 48,071 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரி, ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்டது.

இது, இதற்கு முந்தைய சாதனையான, கடந்த 14.01.18 அன்று 'எம்.வி.பான்ஜியா' (M.V.Pangea) என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்ட அளவான, 42,508 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரியைவிட கூடுதலாகும். இதன்மூலம், புதிய சாதனை பதிவாகியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் என்.பி.டி.எல் அனல்மின் நிலையத்திற்கான வடக்கு சரக்கு முதலாவது தளத்தில் 3.28 மில்லியன் டன் அனல்மின் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் 2018 வரை 3.11 மில்லியன் டன் அனல்மின் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது.

அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள்,  முகவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டு முயற்சியால்தான் இச்சாதனை படைக்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க