வங்கிக் கடன் மோசடி - சிபிஐ சோதனையை அடுத்து கனிஷ்க் அதிபர் வீட்டில் ஏல நோட்டீஸ் ஒட்டியது எஸ்பிஐ

சிபிஐ அதிகாரிகளின் சோதனையை அடுத்து, கனிஷ்க் அதிபர் பூபேஷ்குமார் வீட்டில், ஏலம் தொடர்பான நோட்டீஸ் ஒட்டியது, எஸ்பிஐ வங்கி. 

Kanishk Gold owner

சென்னை தி.நகரில் உள்ள 'கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிட்' எனும் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் ஆகியோர், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 12 வங்கிகளிடம் ரூ. 747 கோடி கடன் பெற்றுள்ளனர். வட்டித் தொகையுடன் சேர்த்து, மொத்தம் ரூ.824 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக, எஸ்பிஐ வங்கி நேற்று சிபிஐ-யிடம் 16 பக்க புகார் அளித்தது. 

இதையடுத்து, கடன் மோசடியில் ஈடுபட்டதாக பூபேஷ்குமார் மீது டெல்லி சிபிஐ-அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, தி.நகரில் இருக்கும் அவரின் கடையைச் சோதனைசெய்ய, நேற்றிரவு அதிகாரிகள் சென்றனர். அப்போது, அந்தக் கடை நான்கு மாதங்களுக்கு முன்பே காலி செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. அதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் மூன்று மணி நேரம், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக, கனிஷ்க் பிரைவேட் லிமிட், பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை ஒரு புறம் இருக்க, வங்கி அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்துகொண்டிருக்கின்றனர். அதனால், எஸ்பிஐ வங்கி, இன்று நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள பூபேஷ்குமார் வீட்டில் ஏலம் தொடர்பான நோட்டீஸை ஒட்டியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!