கடலில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி! - குழந்தையைக் கடத்த வந்ததாகக் கூறி நடந்த கொடூரம்

மூதாட்டி - கொடூரம்

பிச்சை எடுக்கச் சென்ற மூதாட்டியை, குழந்தை திருட வந்ததாக நினைத்து கடலில் தூக்கி வீசியதாக வெளியான வீடியோகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமம் ஒன்றில் பிச்சை எடுக்கச் சென்ற மூதாட்டி ஒருவர், குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனத் தவறாக நினைத்துத் தாக்கி, கடலில் தூக்கி வீசிய கொடூரம் நடந்திருப்பதாக வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ பரவியது. குமரி மாவட்டத்தில், வீடுகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி அடையாளம் வைத்து, அந்த வீட்டிலிருந்து குழந்தைகளைக் கடத்துவதாகக் கடந்த மாதம் தகவல் பரவியது. குளச்சல் பகுதியில் உள்ள சில வீடுகளில், கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமத்தில், பசிக்கிறது என பிச்சை எடுக்கச் சென்ற மூதாட்டியை சிலர் அடித்துத் தூக்கி கடலில் போடும் காட்சி, வாட்ஸ்அப்பில் பரவியது. அது, கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமமாக இருக்கலாம் என சந்தேகம் கிளம்பியது. மேலும், நான்கு நாள்களுக்கு முன், இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தகவல் பரவியது. இதுகுறித்து குளச்சலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் பேசினோம்.''அந்த வீடியோவை டி.வி-யில்தான் நாங்கள் பார்த்தோம். நாங்கள் விசாரித்த அளவில், அது கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைபோன்று தெரியவில்லை'' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!