பக்கவாதத்தால் உயிருக்குப் போராடும் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை!

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி ( 42 வயது), பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமலும் திரும்பிப் படுக்க முடியாமலும், படுத்த படுக்கையாக உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமானநிலையில் உள்ளது. கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில், மருத்துவ குழு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்துவருகிறது. தினந்தோறும் பொதுமக்கள் பார்வையிட்டுவருகிறார்கள்.

யானைக்கு பழம் கொடுத்துவரும் ரியாஷ், ''நான், சேலம் நாராயண நகரிலிருந்து வருகிறேன். ராஜேஸ்வரி சுகவனேஸ்வரர் கோயிலில் இருக்கும்போதே, வாரம்தோறும் திராட்சை, சப்போட்டா, தக்காளி என பல்வேறு பழங்கள் கொடுத்துவந்தேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேஸ்வரியை கோயிலில் இருந்து கோரிமேடு ஏ.டி.சி நகரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்துக்கு மாற்றினார்கள்.

இங்கு வந்த பிறகும், வாரம்தோறும் பழங்கள் கொடுப்பேன். ராஜேஸ்வரிக்கு பிறவியிலேயே முன் இடது கால் ஊனம். 3 காலில்தான் நின்றுகொண்டிருக்கும். கோயிலில் இருந்து லாரியில் கொண்டுவந்து இறக்கும்போது, பின் காலில் அடிப்பட்டுத் தேறி வந்தது. இந்தநிலையில், கடந்த 15 நாள்களாக முன் வலது கால் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமல், உணவு எதுவும் உட்கொள்ளாமல் படுத்தபடுக்கையாக இருந்தது. யாரும் கவனிக்கவில்லை. என்னைப் போன்ற பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு, தற்போது கால்நடை மருத்துவர் மனோகர் தலைமையில் மருத்துவக் குழுவினர், 24 மணி நேர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சேலம் கலெக்டர் ரோகிணியும் நேற்று வந்து பார்த்துவிட்டு சிறப்புக் கவனம் எடுத்து சிகிச்சை கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இருந்தபோதும், மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் நோயை குணப்படுத்தி இருக்க முடியும். தற்போது, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது'' என்றார்.

இதுபற்றி யானைப் பாகன் பாஸ்கரனிடம் கேட்டதற்கு, ''நான் எட்டு வருஷமா இந்த யானையை கவனித்துவருகிறேன். பக்கவாத நோய் தாக்கிய உடனே அறநிலையத்துறையில் யானை கவனிப்பு மேற்பார்வையாளர்களான வன்னிய திலகம், சசிகுமாரிடம் சொல்லி விட்டேன். அவர்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் கவனித்திருந்தால், யானைக்கு இந்த நிலை வந்திருக்காது'' என்று கண் கலங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!