வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (22/03/2018)

கடைசி தொடர்பு:14:05 (22/03/2018)

`எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்' - சசிகலா பரோலுக்குக் காரணமான அ.தி.மு.க எம்.பி பேட்டி

சசிகலா பரோல்- அ.தி.மு.க. எம்.பி.

சிகலா பரோலுக்கு, எம்.பி ஒருவர் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற சூழலில், கோவை அ.தி.மு.க எம்.பி., நாகராஜன், பரோலுக்கு ஜாமீன் கடிதம் கொடுத்திருக்கிறார். 'என்னிடம் யாரும் கடிதம் கேட்கவில்லை. நானாக முன்வந்தே கடிதம் கொடுத்தேன்' என அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சசிகலாவின் பரோலுக்கு அ.தி.மு.க எம்.பி-க்கள் யாரும் கடிதம் கொடுக்காததாலே, பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. 50 உறுப்பினர்களைக்கொண்ட அ.தி.மு.க-விலிருந்து ஒருவர்கூட கடிதம் கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்திருந்தது. 'சசிகலா 2 நாள்கள் முன்பே வந்து நடராசனைப் பார்த்திருக்க முடியும். ஆனால், தமிழகத்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட சசிகலா பரோலில் வர கையெழுத்திடவில்லை. இதை நினைக்கும்போது மிகுந்த மனவலியைத் தருகிறது' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சசிகலாவின் பரோலுக்காக அ.தி.மு.க-வைச் சேர்ந்த கோவை எம்.பி., நாகராஜ், பெங்களூரு சிறைத்துறைக்குக் கடிதம் கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து சசிகலா பரோலில் வெளிவந்தார். மக்களவை, மாநிலங்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக, 50 எம்.பி-க்களைக்கொண்ட அ.தி.மு.க-விலிருந்து ஒருவர்கூட சசிகலாவுக்கு ஆதரவாகக் கடிதம் கொடுக்காத நிலையில், கோவை எம்.பி., நாகராஜன் கடிதம் கொடுத்திருந்தார். அதோடு, நடராசனின் இறுதிச்சடங்கு  நிகழ்விலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.

பெங்களூரு மத்திய சிறைச்சாலை தலைமை கண்காணிப்பாளருக்குக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலேயே அவர் விடுவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, கோவை எம்.பி.,நாகராஜனிடம் பேசினோம். "பரோல் பெறுவதற்கு சிறைத்துறையில் சில விதிமுறைகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு எம்.பி கடிதம் கொடுக்க வேண்டும் என்பது ஒன்று போலிருக்கிறது. என்னிடம் யாரும் கடிதம் கேட்கவில்லை.  எனக்குத் தெரிந்தவுடன் நானே முன்வந்து கடிதம் கொடுத்தேன். இவர்கள்தான் கட்சியை வளர்த்தவர்கள். இந்தக் கடிதம் கொடுத்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்" என்றார்.