உஷா மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! | Inspector Kamaraj's bail rejected for the second time

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (22/03/2018)

கடைசி தொடர்பு:15:05 (22/03/2018)

உஷா மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

உஷா மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாகத் தள்ளுபடிசெய்யப்பட்டது.
உஷா

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்துள்ள சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, தனது மனைவி உஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்காகத் தனது பைக்கில் திருச்சிக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, துவாக்குடி டோல் பிளாசா அருகே, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீஸார், ராஜா வந்த வாகனத்தை மறித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜாவை, இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று, திருவெறும்பூர் பெல் கணேசா ரவுண்டானா அருகே எட்டி உதைத்ததாகக் கூறப்படும் நிலையில், பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷாவும், ராஜாவும் கீழே விழுந்தனர். இதில், உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, கர்ப்பிணியின் மரணத்துக்கு நீதிகேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இறுதியாக, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது நடந்த கலவரத்தில், 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதேபோல, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். 
 
 இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள், கடந்த 16-ம் தேதி  ஜாமீனில் வெளியே வந்தனர். அதையடுத்து, கடந்த 16-ம் தேதியே கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை நிராகரிக்கக் கோரி, திருச்சி இன்ஸ்பெக்டர் காமராஜ்வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் உஷாவின் கணவர் ராஜா, மக்கள் அதிகாரம் சார்பில் ஆட்சேபனை மனுத்தாக்கல் செய்தனர்.  கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அன்று மாலை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி லோகேஷ்வரன், ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.

இந்த விவகாரம்குறித்து நேற்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜின் நீதிமன்றக் காவலை, திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 6, வரும் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
 
இன்று காலை, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை நீதிபதி குமரகுரு தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.