வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (22/03/2018)

கடைசி தொடர்பு:15:35 (22/03/2018)

’நான் எப்ப போலீஸ் பாதுகாப்பு கேட்டேன்?!' - பெரியார் தொண்டரை திகைக்கவைத்த சேலம் போலீஸ்

சேலத்தில், தி.வி.க செயலாளராக இருப்பவரின் வீட்டுக்கு, அவர் கேட்காமலேயே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தி.வி.க டேவிட் - போலீஸ் பாதுகாப்பு

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாளராக இருப்பவர், டேவிட்.  இவரது வீடு, சேலம் - திருச்சி சாலையில் உள்ள
பில்லுக்கடை பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ளது. இவர், ஆயத்த ஆடைகள் விற்பனை செய்துவருகிறார். நேற்று மாலை இவரது வீட்டுக்கு வந்த அன்னதானப்பட்டி போலீஸார், இவரது வீட்டுக்குப் பாதுகாப்பாக ஒரு போலீஸை நியமித்துவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை அங்கு வந்த மாநகர காவல்துறை துணை ஆனையர் சுப்புலட்சுமி, காவலரிடம் விசாரித்துவிட்டு, எட்டு மணி நேரத்துக்கு ஒரு காவலர் வீதம் காவல் பணி மேற்கொள்ளுமாறு கூறி, அவருக்கு சில கண்காணிப்பு முறைகளை எடுத்துக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதுபற்றி டேவிட் கூறும்போது, "என் வீட்டுக்கு நான் பாதுகாப்பு கேட்கவும் இல்லை; இவர்கள் எதற்காக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பதுகுறித்து விளக்கமும் கூறவில்லை. எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, எனக்கு எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை என்று கூறினேன். ஆனால் போலீஸார், மேலிடத்து உத்தரவு என்று கூறுகின்றனர். ஒரு வேளை என் நடவடிக்கைகளைக் கண்காணிக்க போலீஸாரை நியமித்துள்ளார்களா என்றும் தெரியவில்லை. மாவட்டத்தில் உள்ள மற்ற நிர்வாகிகள் வீடுகளுக்கும் இதுபோன்ற பாதுகாப்பு எதுவும் போடவில்லை" என்றார்.