வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (22/03/2018)

கடைசி தொடர்பு:16:40 (22/03/2018)

லஞ்சம் கேட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட அங்கன்வாடி பெண் ஊழியர்! கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட பணியாளர்கள்

நெல்லை மாவட்டத்தில் அங்கன்வாடிப் பணியாளரிடம் லஞ்சம் கேட்டு உயரதிகாரி டார்ச்சர் செய்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

அங்கன்வாடி பணியாளர்கள்

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார். இவரது மனைவி சுமதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் வாகைக்குளம் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர் வேலை கிடைத்தது. விதவைக்கான ஒதுக்கீட்டில் அவருக்குப் பணி வழங்கப்பட்டது. அவரது மகள்கள் இந்துமதி, ரோகிணி ஆகியோர் கோவையில் விடுதியில் தங்கி ப்ளஸ் டூ மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

தகுதியின் அடிப்படையில் சுமதிக்கு வேலை கிடைத்த போதிலும், திட்ட அலுவலர் ஜெயசூரியா, குழந்தைகள் நல வளர்ச்சித்திட்ட அலுவலர் சாந்தி ஆகியோர் லஞ்சப் பணம் கேட்டு அவரிடம் டார்ச்சர் செய்ததாகத் தெரிகிறது. ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு தொடர்ந்து பணியாற்றுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். சுமதியின் இடத்தில் பணியாற்ற 3 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு ஆட்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். 

தொடர்ச்சியாக அவருக்கு டார்ச்சர் அளிக்கப்பட்டதால் மனமுடைந்த சுமதி கடந்த 11-ம் தேதி, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (21-ம் தேதி) உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல வளர்ச்சித்திட்ட அலுவலர் சாந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும், திட்ட அலுவலர் ஜெயசூரியா மற்றும் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாந்தி ஆகியோரை கைது செய்யவும் சுமதி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுவரையிலும் உயிரிழந்த சுமதியின் உடலை வாங்கப் போவதில்லை என இந்தியத் தொழிற்சங்க மையத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஊழியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம்

அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் ஒப்புக் கொண்டார். அத்துடன், சுமதி அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவதாகத் தெரிவித்து ஆயிரக்கணக்கான அங்கன்வாடிப் பணியாளர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களிடம் கலெக்டர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.