வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (22/03/2018)

கடைசி தொடர்பு:17:20 (22/03/2018)

பைக்கில் சென்ற பெண் அதிகாரியின் உயிரைப் பறித்த கொள்ளையர்கள்!

வேலூர் மாவட்டம் பானாவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது  மர்மநபர்கள் பின் தொடர்ந்து செயின் பறித்தபோது வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் சுகாதார ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மல்லிகா, நேற்று முன்தினம் பணிமுடித்து தன் கணவர் வீராசாமியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். மாங்குப்பம் தைலமரத்தோப்பு அருகே சென்றபோது அவர்களைப் பின் தொடர்ந்த மர்ம ஆசாமிகள், மல்லிகா அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்த மல்லிகாவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரின் கணவர் வீராசாமி, மல்லிகா பணியாற்றிய மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்படவே சிகிச்சைக்கு சென்னைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். மேல் சிகிச்சைக்காக மல்லிகா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் அவர், சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்தார். செயின்பறிப்பு சம்பவம் குறித்து பானாவரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, மர்ம நபர்கள் யார் என்பதை விசாரணை  நடத்தி, தேடி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க