வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (22/03/2018)

`இவரிடம் சென்றால் உன்னைப் பிடிக்க முடியாது என்றார்'- சிறையிலிருந்து தப்பிய கைதி வாக்குமூலம்

அரியலூர் கிளை சிறைச்சாலையிலிருந்து தப்பிய குற்றவாளி வேலூரில் பிடிபட்டார். கைதி கொடுத்த வாக்கு மூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

சிறைச்சாலை

அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை உள்ளது. இதில், 19 வயதிலிருந்து 21 வயதுக்குக் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கான பாஸ்டர் சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறைச்சாலையில் அரியலூர் மாவட்டம், நாயகனைப்பிரியாளை சேர்ந்த 19 வயதுடைய இளம் குற்றவாளி மணிகண்டன், ஜெயங்கொண்டம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் கடந்த 15ந்தேதி கைது செய்யப்பட்டு பாஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 19 ம் தேதி மணிகண்டன்  சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

கைதி

இதுகுறித்து பாஸ்டர் சிறைச்சாலையின் உதவி ஜெயிலர் பாலு புகாரளித்தார். இதன் அடிப்படையில் மணிகண்டன் தப்பியோடிய சம்பவம் குறித்து அரியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் திருச்சி மத்திய சிறை டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் 5 பேர் கொண்ட இரண்டு தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவந்தனா். சிறையிலிருந்த கைதி வேலூர் மாவட்டத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் அந்தத் தனிபடை வேலூர் மாவட்டம் ஜோலார் போட்டையில் நண்பர்களின் ரூம்மில் தூங்கிக்கொண்டிருந்த போது மணிகண்டனை போலீஸார் கைது செய்தனா். அவனிடம் போலீஸார் விசாரித்தபோது ஜெயிலிலிருந்து தப்பித்து இந்த மாவட்டத்தில் எங்கு தங்கியிருந்தாலும் போலீஸார் பிடித்துவிடுவார்கள் என்று என்கூட ஜெயிலில் இருந்தவர் வேலூரில் உள்ள ஒருவரின் நம்பர் கொடுத்தார். அங்குபோய் தங்கிக்கொண்டால் எந்த போலீஸாலும் பிடிக்க முடியாது என்று சொன்னார். அதன் பிறகே இங்கிருந்து தப்பி ஜோலார்பேட்டைக்கு வந்தேன். அங்கு வைத்து என்னை போலீஸார் பிடித்துவிட்டனர்'' என்றார்.