வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (22/03/2018)

கடைசி தொடர்பு:18:40 (22/03/2018)

புதுச்சேரியில் மூன்று பாஜக எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுச்சேரியில் மூன்று பாஜக எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி நியமன எம்.எல்.ஏ மற்றும் வாரியத் தலைவர் பதவிகளை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வந்தது. ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் அதைப் பயன்படுத்திக் கொண்ட மத்திய அரசு புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் உள்ளிட்டவர்களை எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது. ஆனால், எம்.எல்.ஏ-க்கள் நியமன விவகாரத்தில் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறிய சபாநாயகர் வைத்திலிங்கம் அந்த மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார்.

அதையடுத்து ஆளுநர் மாளிகையில் அந்த மூன்று பேருக்கும் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து பரபரப்பைக் கூட்டினார் கிரண்பேடி. இதற்கிடையில் மத்திய உள்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் முதல்வரின் பாராளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன். ஆளுநரின் பதவிப் பிரமாணச் சான்று மற்றும் அரசிதழில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் தங்களுக்கு இருக்கைகள் ஒதுக்குமாறும் மீண்டும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டார்.

இதனிடையே, ஆளுநர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேநேரத்தில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதித்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் தலைமையில் அமர்வு, மத்திய அரசு நியமித்த மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்று அதிரடியாகக் கூறியது.

``இந்தத் தீர்ப்பின் மூலம் மக்களாட்சி வலிமை பெற்றுள்ளது. ஆட்சிப் பொறுப்பு அதிகரித்திருப்பதுடன் மக்களுக்குச் சேவை செய்ய கூடுதலாக மூன்று எம்.எல்.ஏ-க்கள் கிடைத்திருக்கின்றனர்” என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துத் தெரிவித்திருக்கிறார். முதல்வர் நாராயணசாமி, ``தீர்ப்பின் நகல் முழுமையாகக் கிடைக்கவில்லை. அது கிடைத்தபிறகே கருத்துத் தெரிவிப்பேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

வழக்குத் தொடர்ந்த  காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன், "ஜனநாயகத்தை நிலைநாட்ட நாங்கள் மேல்முறையீடு செய்வோம்" என்று கூறினார். சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்த பிரதமர் மோடி, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏ-க்களை புதுச்சேரி அரசு கடமையாற்ற விடாமல் தடுத்துவருகிறது” என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க