`மோடியால்தான் இவர்களுக்குத் துணிச்சல்'- ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய ஜி.ராமகிருஷ்ணன் | CPM stages protest over Madurai church attack in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (22/03/2018)

கடைசி தொடர்பு:19:00 (22/03/2018)

`மோடியால்தான் இவர்களுக்குத் துணிச்சல்'- ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய ஜி.ராமகிருஷ்ணன்

மதுரையில் பைபிள் எரிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் `நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்துதான் இந்துத்துவா அமைப்புகளின் வன்முறைகள் அதிகரித்துள்ளன” எனத் தெரிவித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, தஞ்சை மாவட்ட அனைத்துக் கிறிஸ்துவ அமைப்புகள், கிறிஸ்து நல்லெண்ண இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன், `இங்குள்ள சிறுபான்மை அமைப்பினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்துக்கள் தாக்குதல் நடத்தியதாகப் பொதுவாகச் சொல்லாதீர்கள். சங் பரிவார் இயக்கங்களைச் சேர்ந்த இந்துத்துவா வெறியர்கள் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மதுரையில் பைபிளை தீயிட்டு கொளுத்தியதோடு மட்டுமல்லாமல், தேவாலயங்களுக்குள் புகுந்து பாதிரியார்களை மிரட்டி, பெண்களை மானபங்கப்படுத்தி வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகமாக நடந்துள்ளன. நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் அதிகமாக நடக்கின்றன. மோடியினால்தான் இந்துத்துவா வெறியர்கள் துணிச்சல் பெற்றுள்ளார்கள். சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கும் போதெல்லாம் முதல் கண்டனக் குரல் கம்யூனிஸ்டுகளிடம் இருந்துதான் வரும். இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தொடங்கப்பட்டபோது தங்களது மூன்று எதிரிகள் என முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என அறிவித்தார்கள். சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் எப்பொழுதுமே பாதுகாப்பாக இருப்போம்” இதனால்தான் எங்களையும் அவர்கள் எதிரிகள் என அறிவித்தார்கள்” என்றார்.