வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (22/03/2018)

கடைசி தொடர்பு:17:25 (22/03/2018)

ஹெச்.ராஜாவை மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரிய வழக்கு! - காவல்துறையைக் கேள்வி கேட்ட நீதிமன்றம்

ஹெச்.ராஜாவை கைது செய்து, மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தகோரும் புகாரில் போலீஸ் எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. 

ஹெச். ராஜா

திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் தமிழ்வேந்தன். இவர் கடந்த 7ம் தேதி பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது சென்னைக் காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், `ஹெச். ராஜா தொடர்ந்து தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். பொது அமைதிக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் கருத்துக் கூறி வருகிறார். மனநோயாளி போல் நடந்துகொள்ளும் ஹெச்.ராஜாவைக் கைது செய்து மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.


தமிழ்வேந்தனின் புகாரைப் பெற்ற காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக மனு கொடுத்தார். அந்த மனுவில் தன் புகார் மீது அம்பத்தூர் காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் தமிழ்வேந்தன் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எஸ்.ரமேஷ் `ஹெச்.ராஜாவுக்கு மனநலப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றுகோரிய புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மார்ச் 28ம் தேதி நடக்கிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க