தமிழிசை, வானதி சீனிவாசனுக்கு பெ.மணியரசன் சவால்!

`தன்மானமும் தமிழர்களின் மீது அக்கறையும் இருந்தால் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் எனத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

பெ.மணியரசன்

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லவில்லை எனவும் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும்தான் சொல்லியுள்ளது. அதனை மார்ச் 30-க்குள் அமைக்க முடியாது என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன் `மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு காவிரி பிரச்னையில் எப்பொழுதுமே நேர்மையாக நடுநிலையோடு நடந்துகொண்டதில்லை. அனைத்து மாநிலங்களும் ஏற்கக்கூடிய செயல்திட்டத்தை உருவாக்குவோம் என நீர்வளத்துறை அமைச்சர் யு.பி.சிங் சொல்கிறார். இதன் அர்த்தம் என்ன? கர்நாடகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரமற்ற செயல் திட்டத்தை உருவாக்கப்போகிறோம் என மத்திய அமைச்சர் சுற்றி வளைத்துச் சொல்கிறார். இது தமிழர்களுக்கு எதிரான அநீதி.

நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, பக்ரா பியாஸ் ஆகிய நதிகள் பாயக்கூடிய மாநிலங்களுக்கு இடையே சிக்கல்கள் எழுந்தபோது தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு, அவை வழங்கிய தீர்ப்புகளை மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், காவிரி தீர்ப்பாயம் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், தன்மானம் இருந்தால் தமிழிசை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ்நாட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து பா.ஜ.க.-விலிருந்து விலக வேண்டும் ‘என வலியுறுத்தினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!