வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (22/03/2018)

`மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடை செய்யுங்கள்' - மதுரை கலெக்டரிடம் அய்யாக்கண்ணு மனு

அய்யாக்கண்னு

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதைத் தடை செய்யக் கோரியும் மனு ஒன்றை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்விடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு அளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விவசாயிகள் விளைவித்த நெல் பயிருக்கு சரியான விலை கொடுக்காமலும் விவசாயச் சாகுபடிக்குத் தண்ணீர் கொடுக்காமலும் இருப்பதால் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தைவிட்டு ஓடும் நிலை வந்தால், கார்ப்பரேட் நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட விதையைக் கொண்டு பயிரிடும் நிலை வரக் கூடாது என்பதற்காக, வரும் 1-ம் தேதி முதல் கன்னியாகுமரியில் தொடங்கி அனைத்து மாவட்டம் வழியாகச் சென்று ஜூன் மாதம் 10-ம் தேதிக்குள் சென்னையை அடையவுள்ளோம். என்னுடன் 25 பேர் பயணிக்கிறார்கள். அவ்வாறு மரபணு மாற்றப்பட்ட விதையால் உருவான உணவை, நம் நாட்டு இளைஞர்கள் 5 வருடம் அந்த உணவை சாப்பிட்டு வந்தால் ஆண்மைத் தன்மையை இழந்து மலட்டுத் தன்மையை அடைந்துவிடுவர். பெண்கள் அந்த உணவை உண்டு வந்தால் கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிடுவார்கள்.

மதுரை வைகையாற்றில் சாக்கடை கலப்பதைத் தடுக்க வேண்டும். வைகையில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாகக் கடலில் கலக்காமல் இருக்க ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். மதுரையில் உள்ள ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள், அனைத்தும் தூர்வார வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சொன்னேன். அதற்கு கண்டிப்பாகச் செய்து தருகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரை விவசாயிகளை சொசைட்டியில் உறுப்பினராகச் சேர்க்க மறுக்கிறார்கள். அவர்களுக்கு கடன் உதவி வழங்க மறுக்கிறார்கள், அவர்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளேன். அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளோம். தற்போது வரை 8 மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காவிட்டால், டெல்லியில் அனைத்து விவசாயச் சங்கங்களும் ஒன்று இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளோம்'' எனத் தெரிவித்தார் .