கிரே வாட்டர், ஒயிட் வாட்டர், பிளாக் வாட்டர்... தண்ணீர் சிக்கனத்துக்குச் சில வழிகள்! #SaveWater | Follow these steps to save water from this water day

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (22/03/2018)

கடைசி தொடர்பு:19:35 (22/03/2018)

கிரே வாட்டர், ஒயிட் வாட்டர், பிளாக் வாட்டர்... தண்ணீர் சிக்கனத்துக்குச் சில வழிகள்! #SaveWater

`இன்று உலகத் தண்ணீர் தினம். தண்ணீர் அரசியல் தலைக்கு மேல் செல்கிற விஷயம். அதைச் சரிசெய்ய தொடர்ந்து முயற்சி செய்வோம்.  மற்றபடி, தண்ணீரை எப்படியெல்லாம் சிக்கனமாகப் பயன்படுத்தலாம், எங்கெல்லாம் தண்ணீரின் தேவையைக் குறைக்கலாம், மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகைகள் ஆகியவற்றை அனைவருமே தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக, வீட்டு நிர்வாகிகளான பெண்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்கிறார், நீர் மேலாண்மையில் பல வருட அனுபவமுள்ள `எக்ஸ்னோரா' நிர்மல். 

தண்ணீர்

நிர்மல்அரிசியைக் கழுவிய தண்ணீரைத் தொட்டிச் செடிக்கு ஊற்றுங்கள்; துணி துவைத்த தண்ணீரைத் தோட்டத்துச் செடிகளுக்கு ஊற்றுங்கள் என்கிற டிப்ஸ் எல்லாம் எல்லாப் பெண்களுக்கும் தெரிந்த விஷயமே. அதனால்,  சோப்பு தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றலாமா, எளிமையான முறையில் நீரை எப்படி மறுசுழற்சி செய்வது என்பது போன்ற தகவல்களையே இங்கே பேசப்போகிறேன். 

முதல் நிலை கிரே வாட்டர்... 

காய்கறி கழுவியத் தண்ணீரும், அரிசி கழுவியத் தண்ணீரும்தான் முதன்மை கிரே வாட்டர். இந்தத் தண்ணீரை, ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் சேமித்து வையுங்கள். இந்தத் தண்ணீரில் சாப்பிட்ட தட்டுகள், சமைத்த பாத்திரங்கள், டம்ளர்களை அலசி எடுத்துக்கொள்ளலாம். பிறகு, ஆர்கனிக் பவுடர் பயன்படுத்தித் தேய்த்துக் கழுவினால், தண்ணீர் குறைவாகவே செலவாகும். 

இரண்டாம் நிலை கிரே வாட்டர்... 

இது பாத்திரங்கள் கழுவிய தண்ணீர். ஆனால், வழக்கமான டிஷ்வாஷரைப் பயன்படுத்தினால், இந்தத் தண்ணீரைக் கண்டிப்பாகச் செடிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. எலுமிச்சைத் தோல், ஆரஞ்சு பழத்தோல், சீயக்காய், சோப்புக்காய் சேர்த்து அரைத்த பவுடரைப் (ஆர்கானிக் பவுடர்) பயன்படுத்தி பாத்திரங்களைத் தேயுங்கள். அந்தத் தண்ணீரை தாராளமாகச் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். 

ஒயிட் வாட்டர் மண்ணுக்கு... 

துணி துவைத்த தண்ணீர்தான் ஒயிட் வாட்டர். எல்லா வீட்டிலுமே துணி துவைக்கத்தான் அதிகத் தண்ணீர் செலவாகும். இந்தத் தண்ணீரை அப்படியே பாதாளச் சாக்கடையில் கொட்டிவிடாதீர்கள். உங்கள் வீட்டுக்கு முன்னால் கொஞ்சம் மண் தரை இருந்தாலும், அங்கே செல்லும் வகையில் கொட்டுங்கள். நிலத்தடி நீர் வளம் பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், இப்படி தாரை வார்த்தால், பூமித்தாயே உங்களுக்கு நன்றி சொல்வாள். 

நீர்

எங்கள் வீட்டில் தோட்டம் இருக்கிறது. துணி துவைத்த தண்ணீரை அதற்கே பயன்படுத்துகிறோம் என்பவர்கள், சோப்புத் தண்ணீர் போகும் வழியில் சேனைக்கிழங்குச் செடிகளை வளருங்கள். வேரில் கிழங்கு இருக்கும் செடிகள் எல்லாமே, சோப்பில் இருக்கும் பாஸ்பேட்டை உறிஞ்சிக்கொள்ளும். இதனால், சோப்புத் தண்ணீரால் மற்ற செடிகளுக்கு எந்தப் பிரச்னையும் வராது. இந்தத் தண்ணீரால் சேனைக்கிழங்குக்கும், அதைச் சாப்பிடும் நமக்கும் பிரச்னை வராது. `நீங்க எவ்வளவு சமாதானம் சொன்னாலும் பயமா இருக்கே' என்பவர்கள், சேனைக்கிழங்குக்குப் பதிலாக கல்வாழைச் செடிகளை சோப்புத் தண்ணீர் போகும் பாதையில் வளருங்கள். 

வீட்டுக்கு முன்பு மண் தரையும் இல்லை; தோட்டமும் இல்லை என்பவர்கள், துணி துவைத்த தண்ணீரை வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்திய பிறகு, அதில் ஊற்றச் சேமியுங்கள். 

பிளாக் வாட்டர்... அப்படியென்றால்? 

சென்னை மாதிரியான மெட்ரோபாலிட்டன் சிட்டியில்தான் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள். சின்னச் சின்ன டவுன்களில், கிராமங்களில் இப்போதும் செப்டிக் டேங்க் பயன்பாடே அதிகம். அவர்களுக்கான நீர் சேமிப்பு முறைதான் இது. செப்டிக் டேங்கில் ஏதாவது ஒரு பயோஎன்சைமை போட்டுவிட்டு, மறுநாள் பாருங்கள். தண்ணீர் பளிங்குபோல இருக்கும். அந்த பயோஎன்சைமில் இருக்கும் பாக்டீரியாக்கள், செப்டிக் டேங்கில் இருக்கும் அத்தனை கழிவுகளையும் தின்று தீர்த்துவிடும். இந்தத் தண்ணீரையும் தோட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் அல்லது டாய்லெட்டில் ஊற்றுவதற்குப் பயன்படுத்தலாம். 

வாஷ்பேசினை ஃபிளஷுடன் இணையுங்கள்! 

வாஷ்பேசினில் பல் தேய்க்க, முகம் கழுவப் பயன்படுத்தும் தண்ணீரையும் வீணாகச் சாக்கடையில் விடாமல், பக்கெட்டில் பிடித்து மண் தரையில் ஊற்றலாம். அல்லது டாய்லெட்டில் ஊற்றப் பயன்படுத்தலாம். பாத்ரூமுக்குள் வாஷ்பேசின் இருந்தால், அதை ஃபிளஷுடன் இணைத்து, அந்தத் தண்ணீரை டாய்லெட்டுக்குப் பயன்படுத்தலாம். 

வெஸ்டர்ன் டாய்லெட்டிலும் சேமிக்கலாம்! 

உங்களுக்குத் தெரியுமா? ஒன் பாத்ரூம் போய்விட்டு ஃபிளஷ் செய்தால், குறைந்தது 6  லிட்டர் தண்ணீர் வீணாகும். இப்படி அநியாயத்துக்குத் தண்ணீர் வீணாவதைத் தடுக்க, ஃபிளஷ் டேங்கை ஸ்லிம்மாக வாங்குங்கள். அல்லது, ஃபிளஷ் டேங்குக்குள் 2 சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டுவிட்டு, ஃபிளஷ் செய்யுங்கள். பாதி அளவே தண்ணீர் செலவாகும். 


டிரெண்டிங் @ விகடன்