வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (22/03/2018)

கடைசி தொடர்பு:21:40 (22/03/2018)

ஆற்றங்கரைகளை வலுப்படுத்த கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சூப்பர் முயற்சி!

``ஆற்றங்கரையோரங்களைப் பலப்படுத்த, கரையோரங்களில் மரங்களை நட்டு பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது" என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர் ஆட்சித் தலைவர் அன்பழகன்

கரூர் சாரதா மகளிர் கல்லூரியில் உலக வன நாளையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் மரக்கன்றுகளை நட்டு, உலக வன நாள் தொடர்பாக நடைபெற்ற கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், ``காடு வளம் எப்படி உள்ளதோ, அதைப்போல்தான் மனிதனின் நலம் இருக்கும். நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்கள், நிலக்கரி உள்ளிட்ட எரி பொருள்கள் ஒருகாலத்தில் காடுகளிலிருந்துதான் உருவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் ஆகும். தற்போது காடுகள் ஆக்கிரமிப்பு, பாலித்தீன்,காட்டுத் தீ, கார்பன்-டை-ஆக்ஸைடு போன்றவற்றால் அழிந்து வருகிறது. அதை காப்பாற்ற நாம் முன் வர வேண்டும். கரூர் மாவட்டத்தில் 2.3 சதவிகிதக் காடுகள் மட்டுமே உள்ளன. காடுகளின் சதவிகிதத்தை உயர்த்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கரூர் மாவட்டத்திலுள்ள காவிரி, அமராவதி, நங்காஞ்சி, குடகனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் நீளம் 250 கி.மீ. தூரம் உள்ளது. இரு கரைகளையும் சேர்த்தால் 500 கி.மீ. தூரம் உள்ளது. இந்த ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த கரையோரம் வரும் மழைக்காலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க திட்டமிட்டு மரக்கன்றுகள் தயார் செய்யும் பணி நடைபெறவுள்ளது. இதேபோல், பொதுமக்கள், மாணவ,மாணவியர்கள் வீட்டுக்கொரு மரம் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.
கரூர் மாவட்டத்தில்,ரோட்டரி சங்கம் மூலம் 10,000 மரக்கன்றுகளும், சாலையோரங்களில் 2,500 மரங்களும் நடப்பட்டுள்ளன. மேலும், 50,000 மரங்கள் நடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.