வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (22/03/2018)

கடைசி தொடர்பு:21:01 (22/03/2018)

`போலி ட்விட்டர் பதிவுகள்!’ - காவல் ஆணையரிடம் புகார் அளித்த மு.க.ஸ்டாலின்

தனது ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கி, தான் சொல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் போலியான பதிவுகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், 'சமீப காலங்களில் ஒரு சில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டர் பக்கம் போலவே ஒரு போலி கணக்கை உருவாக்கி, என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளைக் நான், சொன்னது போலவும், தமிழ் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கக்கூடிய வகையிலும் ஒரு போலி பதிவை உருவாக்கி, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய விஷமச் செய்திகளை பரப்புபவது தகவல் தொழில் நுட்பச் சட்டப் பிரிவின்படியும், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, அந்த விஷமிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த புகார் கடிதத்துடன் போலி ட்விட்டர் பதிவுகளின் நகல்களையும் இணைத்துள்ளனர்.