வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (23/03/2018)

கடைசி தொடர்பு:04:30 (23/03/2018)

சத்துணவு மையங்களில் பப்பாளி, முருங்கை மரங்கள் வளர்ப்பு...!

சத்துணவு திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது தமிழ்நாடு. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியின்போது மதிய உணவு திட்டமாகத் தொடங்கப்பட்டு, பின் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வரானபோது சத்துணவு திட்டமாக அது மாற்றம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்தும் அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ளார். 

அரசு அலுவங்களிலும் தோட்டக்கலை சாராத அலுவகங்களிலும் தோட்டக்கலையை வளர்த்தெடுத்து, ஊக்கப்படுத்துக்காக, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனைச் செயல்முறைபடுத்தும் முகமாக, சமூகநலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு சத்துமிக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் வகையில், அம்மையங்களில் பப்பாளி, முருங்கை மரங்களை நடுவதற்கு இட வசதியுள்ள அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலமாகப் பப்பாளி, முருங்கை செடிகள் இம்மையங்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெறும். 

மாணவர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பப்பாளி மற்றும் முருங்கை கன்றுகள் வழங்கப்படும். இதற்கான உதவி தேவைப்படும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் அம்மாவட்ட சமூகநலத்துறையின் வழியாக, மாவட்ட தோட்டக்கலை இணை, துணை இயக்குநரைத் தொடர்புகொள்ளலாம்.