"பலா மரத்தை பெற்ற பிள்ளையைப் போல நேசித்தவன் தமிழ்" - உயிரிழந்த நண்பனுக்காக உருகும் நண்பர்கள்!

பலாப் பழத்தைத் தங்கள் மாநிலத்தின் பழமாக கேரளா அறிவித்திருக்கும் சமயத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பலா அறுக்க மரத்தில் ஏறிய விவசாயி, மின்சாரம் தாக்கி இறந்த சோகம் நடந்திருக்கிறது.

தமிழ்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள அணவயல் என்ற கிராமத்தில் வசிப்பவர், தமிழ்ச்செல்வன் (45). இவருக்குச் சொந்தமான பெரிய பலாத் தோப்பு இருக்கிறது. இயற்கை முறையில் பராமரித்து வளர்க்கப்பட்ட மரங்கள்  அவை. அதனாலேயே ஒவ்வொரு வருடமும் பெரும் அறுவடையை தமிழ்ச்செல்வனுக்கு இந்த மரங்கள் தந்திருக்கின்றன. மரங்களைத் தன் சொந்தப் பிள்ளைகளைப் போலவே பராமரித்து வந்திருக்கிறார். அதேபோல, பழம் அறுக்க வேலையாட்களை வைத்துக்கொள்ள மாட்டார். கீழே வலையைக் கட்டிவிட்டு,  அவரே  மரத்தில் ஏறி, பழத்துக்கும் மரத்துக்கும் அரிவாள் வெட்டு விழாமல், காம்பை பக்குவமாக அறுத்து, வலையில் விழ வைப்பாராம்.

இந்த வருடமும்  அவரது தோப்பில் பலாப் பழம் விளைச்சல் அமோகமாக இருந்திருக்கிறது. இவரது தோப்பில் விளையும் பலாப் பழம் இனிப்பாக, நல்ல மணத்துடனும் இருப்பதால், வியாபாரிகள் மத்தியில் இவரது தோப்புப் பலாவுக்கு எப்போதும் மவுசு உண்டு. வழக்கம் போல இந்த வருடமும் ஆர்டர் குவியவே, வருடத்தின் முதல் அறுவடையைத் தொடங்குவதற்காக, கீழே வலைகளைக் கட்டிவிட்டு மரத்தில் ஏறியிருக்கிறார். வலையில் விழும் பழங்களை  எடுத்து அடுக்க கீழே ஒரு வேலையாள் நின்றிருக்கிறார். நான்கைந்து  பலாக்களை அறுத்துப் போட்டிருக்கிறார். உடனுக்குடன் அதை எடுத்து சற்று தூரத்தில் அடுக்கி வைத்திருக்கிறார்.  முதல் மரத்தில் அறுத்து விட்டு, அடுத்த மரத்தில் ஏறியிருக்கிறார்.  

கிளை ஒன்றில் தொங்கிய, பலாப் பழத்தை அறுக்கும்போது, மரத்தின் கிளை அருகில் உள்ள ஹை வோல்டேஜ் மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதில், மின்சாரம் தாக்கியதால், மரத்திலிருந்த தமிழ்ச்செல்வன் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். உடனே வேலையாள் போட்ட கூச்சலில் அக்கம்பக்கத்தினர் திரண்டு, கொஞ்சமும் தாமதிக்காமல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். போகிற வழியிலேயே தமிழ்ச்செல்வன் இறந்திருக்கிறார். இந்தத் தகவலைக் கூறிய அவரது நண்பர் கணேசன், "சின்னவயசு.  இது அவனுக்கு சாகுற வயசே இல்லை. மரங்களை அப்படி நேசிப்பான். அவனை வியாபாரிகளெல்லாம் 'பலா செல்வம்'னு செல்லமாத்தான் கூப்பிடுவாங்க" என்றார் துக்கம் தோய்ந்த குரலில். ‎இந்த விபத்து, அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!