வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (23/03/2018)

கடைசி தொடர்பு:09:34 (23/03/2018)

"மத்திய அரசே மதிக்கவில்லை என்றால் யார் மதிப்பார்கள்" - கொந்தளிக்கும் ஜி.கே.மணி

உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால், யார் மதிப்பார்கள் என பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி கே மணிதிருச்சியில், ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழுக் கூட்டம் திருச்சி புத்தூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் திலீப்குமார், மாநில துணைத் தலைவர் கண்ணதாசன், மாநில அமைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த விழாவில், பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு சிறப்புறை  யாற்றினார்.

முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜி.கே.மணி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேச அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழங்கிய கெடு முடிய இன்னும் ஒருவாரமே உள்ளது. ஆனாலும், மத்திய அரசு வாய்மூடி மௌனியாக உள்ளது. இந்த விவகாரத்தில் அழுத்தம் தரவேண்டிய தமிழக அரசு மௌனமாக இருப்பதுடன், நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்திவருகிறது.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் யூ.பி சிங் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக வேறு ஏதாவது அமைப்பு அமைக்கப்படும் என்கிறார். மத்திய அரசின் வெளிப்பாட்டையே மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறியிருக்கிறார். இது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால், வேறு யார் மதிப்பார்கள்? மத்திய அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்துக்கொண்டே உள்ளது. கடந்த முறை கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருந்தபோதுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது. அப்போது, தேர்தலைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இப்போதும் அதே சூழல் நிலவுகிறது. எனவே, தமிழக அரசு மௌனமாக இருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் எம்.பி-க்கள் ராஜினாமா செய்தால், அன்புமணியும் செய்வார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், 30-ம் தேதி தமிழக விவசாயிகள் கூடி எடுக்கும் முடிவை செயல்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் பா.ம.க, பி.ஜே.பி, அ.தி.மு.க கூட்டணி உருவாக உள்ளதாகத் தகவல் பரப்பப்படுகிறது. அது தவறான தகவல். பா.ம.க., தேசிய கட்சிகள் மற்றும் திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி வைக்கவே வைக்காது” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க