வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (23/03/2018)

கடைசி தொடர்பு:18:02 (02/07/2018)

விஜய் பட பாணியில் விஜயபாஸ்கருக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்!

நடிகர் விஜய் நடித்து, இயக்குநர் விஜய் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'தலைவா' படத்தின் பாணியில், அமைச்சர் விஜயபாஸ்கரை சித்திரித்து ஒட்டப்பட்ட போஸ்டரால், பரபரப்பு பற்றிக்கொண்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், வரும் 29- ம் தேதி பிரமாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு நடக்க இருக்கிறது. அதற்கு, இப்போதே நகரெங்கும் வண்ணமயமான போஸ்டரும் ஃப்ளெக்ஸ் போர்டுகளும் அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் வைக்கப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஒரு தலைவராக சித்திரிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய், சில வருடங்களுக்கு முன்பு நடித்த 'தலைவா' படத்தின் போஸ்டரை அப்படியே 'உல்டா 'வாக மாற்றியிருக்கிறார்கள்.  தன்னைப் பார்த்து உற்சாகமாக மக்கள் குரல் எழுப்புவதைப் பார்த்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சியுடன் கையசைப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டரை விராலிமலை மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கிறார்கள். முதுகைக் காட்டிக்கொண்டு நிற்பது விஜயபாஸ்கர்தான் என்பது தெரிந்தாலும், 'தலைவா' டைட்டிலுக்கு  மேலேயே அமைச்சரின் பெயரை அ.தி.மு.க கொடி வண்ணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மெரினா  புரட்சிக்கு முன்பு வரை தனிப்பட்ட ஊர் விழாக்களாக மட்டுமே இருந்துவந்த ஜல்லிக்கட்டு, இப்போது அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட விழாவாக மாறிவிட்டது. ஆகவே, தன்னுடைய மாவட்டத்தில் எந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தாலும் தவறாமல் ஆஜராகி விடுகிறார், விஜய பாஸ்கர்.அவர்தான் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.

அந்தப் போட்டிகளில் கலந்துக்கொள்வதன்மூலம் தன்னை மக்களுக்கு நெருக்கமானவராகக் காட்டிக்கொள்கிறார் அமைச்சர். "என்னப்பா நம்ம ஊர் பக்கமெல்லாம் அமைச்சர் வரமாட்டேங்குறாரு... என்று கேட்பவர்களுக்கு, " உங்க ஊர்ல ஜல்லிக்கட்டுப் போட்டியை வெச்சுட்டு போய் அவருகிட்ட சொல்லு வந்து கலந்துக்குவாரு"என்று அ.தி.மு.க-வினரே சொல்கிறார்கள். சிறிய,பெரிய ஜல்லிக்கட்டு எதுவா இருந்தாலும் அமைச்சர் வந்துடுவார் என்ற நம்பிக்கை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மத்தியில் காணப்படுகிறது. கவனத்தை கவரும் விதமாக அமைச்சரை வரவேற்கும்  இதுபோன்ற பரபரப்பு போஸ்டர்களை ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் சர்வசாதாரணமாக பார்க்கமுடிகிறது. " அரசியல் பரபரப்பைக் கிளப்பும் போஸ்டர்களை ஒட்டி, எல்லோரையும் திரும்பிப்பார்க்கவைப்பவர்கள் மதுரைக்காரர்கள். இப்போது, புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவிவிட்டது'' என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.