வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (23/03/2018)

கடைசி தொடர்பு:10:12 (23/03/2018)

''அ.தி.மு.க எங்களிடம் வந்ததும், அ.ம.மு.க குளோஸ்!" - புகழேந்தியின் புதுக்குரல்

புகழேந்தி

துரை குலுங்க குலுங்க 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழக'த்தை ஆரம்பித்திருக்கிறார் தினகரன். ஆனால், தொடங்கிய நாள் முதலே கழகத்துக்குள் கலகக் குரல்களும் எழுந்துகொண்டேயிருக்கின்றன. முதல் ஆளாக நாஞ்சில் சம்பத், தினகரனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அடுத்தக் கட்டத் தலைவர்களும் புதிய அமைப்பு குறித்து அதிருப்தியை வெளியிட்டு வருவதாகச் செய்திகள் கசிந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தியை சந்தித்துப் பேசினோம்....

''டி.வி விவாதங்களில் உங்களோடு மல்லுக்கட்டிய கே.சி. பழனிசாமியை அ.தி.மு.க அடிப்படை உறுப்பினரிலிருந்தே வெளியேற்றிவிட்டார்களே....?''

''இது அநியாயம்.... காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை என்பதால், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி கொண்டுவருகிற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க எம்.பி-க்கள் ஆதரிக்க வேண்டும் - என்று கே.சி. பழனிசாமி பேசியது நூற்றுக்கு நூறு சரி. இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழக நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் குரல் கொடுப்பவரை கட்சியை விட்டே நீக்கிவிடுகிறார்கள் என்றால், இந்த ஆட்சி மத்திய பி.ஜே.பி அரசுக்கு எந்தளவுக்கு ஜால்ரா தட்டுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

கே.சி.பழனிசாமி ஒருத்தர்தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறார்; தமிழக மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறார். ஆனால், நியாயமான காரணத்துக்குக்கூட மத்திய அரசை எதிர்க்கமுடியாத மட்டமான அரசாங்கம்தான் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு எதிராகத் தனது கண்டனங்களைப் பதிவுசெய்த மம்தா பானர்ஜி, தன்னுடைய மாநில உரிமைக்காகப் போராடும் சந்திரபாபு நாயுடு போன்ற முதல்வர்களுக்கு மத்தியில், 'மத்திய அரசுக்கு எதிராக ஓட்டுப் போடு' என்று சொன்ன காரணத்துக்காக தனது சொந்தக் கட்சிக்காரரையே நீக்கிவைக்கும் மோசமான முதல்வரைத்தான் நாம் பெற்றிருக்கிறோம் என்பது வேதனையாக இருக்கிறது.''

நாஞ்சில் சம்பத் - டி.டி.வி தினகரன்

'' 'திராவிடம், அண்ணா இல்லாத இடத்தில் இருக்கமாட்டேன்' எனக்கூறி தினகரனை விட்டுப் பிரிந்திருக்கிறாரே நாஞ்சில் சம்பத்?''

''ஆமாம்.... கொள்கை ரீதியாக நாஞ்சில் சம்பத்துக்கு மனக்குறை ஏதேனும் இருந்திருந்தால், தினகரனை நேரில் சந்தித்து முறையிட்டிருக்கலாம். மாறாகக் கட்சியை விட்டு அவர் விலகிச் சென்றது வருத்தம் தருகிறது. ஏனெனில், நாம் கண்ட தலைவர் தினகரன், புதிதாக ஓர் அடி எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இப்படியொரு பிரிவு உண்மையிலேயே வருத்தம் தருகிறது. விரைவிலேயே இது சரிசெய்யப்படும்!''

''அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு இப்போது ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?''

''எங்களுக்கென்று கட்சியும் சின்னமும் கொடுக்குமாறு இந்திய தேர்தல் கமிஷனிடம் நாங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்தக்கட்டமாக நாங்கள் நீதிமன்றம் சென்றோம். அங்கே, எங்களுக்கென்று கட்சியும் சின்னமும் தேர்ந்தெடுத்துக்கொள்ளச் சொல்லி உத்தரவு வந்தது. இதற்குப்பிறகும் ஏன் தாமதப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படியொரு புதிய அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறோம். 

தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டங்களில் தினகரன் புரட்சிப் பயணம் மேற்கொண்டபோது பெருந்திரளான மக்கள் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும், 'தினகரனுக்கு கட்சி கிடையாது; அவருக்கென்று ஒரு முகாந்திரம் கிடையாது' என்றெல்லாம் எங்கள் காதுபடவே சிலர் பேசினார்கள். ஏற்கெனவே, ஆர்.கே.நகர் தேர்தலின்போதே எந்தவிதக் கட்சி பெயரும் இல்லாமல்தான் தேர்தலைச் சந்தித்தோம். நாளையே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படலாம். அந்தச் சூழ்நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் வியூகத்தோடுதான் 'அ.ம.மு.க'-வைத் தயார் செய்துள்ளார் தினகரன்.''

''கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தற்போது, அ.ம.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பது, வழக்கைப் பாதிக்காதா?'' 

''இன்றையச் சூழ்நிலையில், 18 எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை. பதவியில் இல்லாத அவர்கள் ரோட்டில் நடந்து போனால் என்ன... மேடையில் தினகரனோடு கைகோத்து நின்றால்தான் இவர்களுக்கு என்ன? யாரும் இதுகுறித்துக் கேள்வி கேட்கமுடியாது.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

'பதவி நீக்கம் செல்லாது' என்று நாளையே கோர்ட் தீர்ப்பளிக்குமானால், அப்போதுதான் இந்த எம்.எல்.ஏ-க்களின் பதவிகளுக்கு உயிர் வரும். அதற்குப் பிறகு அவர்கள் சட்ட விதிகளுக்கு மாறாக நடந்துகொண்டால்தான், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை யாராலும் எடுக்கமுடியும். அதனால், இப்போதையச் சூழலால் வழக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.''

''தினகரன் புதிய கட்சி ஆரம்பித்தால் நாங்கள் அதில் சேரமாட்டோம் என்று ஏற்கெனவே நீங்கள் அறிவித்திருந்தீர்களே....?''

''இப்போதும் சொல்கிறேன்.... நிச்சயமாக புதுக் கட்சி என்றப் பேச்சுக்கே இடமில்லை. தினகரன் ஆரம்பித்திருக்கும் அ.ம.மு.க என்பது கட்சி அல்ல; இது ஒரு தற்காலிக இயக்கம். 

அ.தி.மு.க எங்கள் கைகளில் வரும்போது, நிச்சயம் இந்த இயக்கத்தை குளோஸ் செய்துவிடுவோம். அதன்பிறகு இந்த அமைப்புக்கு எந்தத் தேவையும் இல்லை; அதேசமயம் இன்றைய நிலையில், இந்த அமைப்பைத் தவிர வேறு வழியும் இல்லை.

'எங்களது கட்சி அ.தி.மு.க.; எங்களது சின்னம் இரட்டை இலை; எங்களது அலுவலகம், அ.தி.மு.க தலைமை அலுவலகம்' என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 

வருங்காலத்தில் வரப்போகிற உயர்நீதிமன்ற உத்தரவு, தற்போதைய ஆட்சி, அதிகாரம் எல்லாவற்றையும் மாற்றியமைக்கப் போகிறது!''


டிரெண்டிங் @ விகடன்