'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்போவதில்லை' - மு.க.ஸ்டாலின் காட்டம்

'அ.தி.மு.க அரசும், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியத்தை  அமைக்க மாட்டார்கள். ஆனால், இவர்கள் தொடர்ந்து  தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்' எனக் குற்றம் சாட்டியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின். 

ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். ''தமிழக உள்ளாட்சித் தேர்தல்குறித்து, உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் உத்தரவுகளைத் தேர்தல் ஆணையமும், ஆளும் அ.தி.மு.க அரசும் நிறைவேற்றவில்லை. ஆக, நீதிமன்றத்தின் உத்தரவை இவர்கள் நிறைவேற்ற முடியாத காரணங்களால்தான் தேர்தல் நடைபெறவில்லை. மேலும், தேர்தல் நடத்தும் எண்ணமும் அவர்களிடம் இல்லை. அதனால், மத்திய அரசு ஒதுக்கும் நிதியைக்கூட பெற முடியாத ஒரு அவல நிலையில் தமிழ்நாடு உள்ளது. ஆனால், தேவையில்லாத வகையில் தி.மு.க-தான் தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதாக, வீண் பழியை அ.தி.மு.க சுமத்துகிறது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடித் தெளிவாக முடிவெடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. இதுவரை பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. அதையும் தாண்டி, சட்டமன்றத்தில் ஏகமனதுடன் அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் போட்டு, பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டோம். அதற்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் நேற்றுகூட கேட்டேன். அதற்கு துணை முதலமைச்சர், '29-ம் தேதிவரை கொஞ்சம் பொறுங்கள்' என்றார்.

குதிரைப்பேரம் நடத்தும் இந்த அரசு, மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. அதனால், நிச்சயமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்போவதில்லை. இவர்கள், கமிஷன் வாங்குவது, கரப்ஷன் செய்வது போன்ற அடிப்படையில்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க, ஊரையும் தமிழக மக்களையும் ஏமாற்றிவருகிறது'' என்றார். 

மேலும், தி.மு.க மண்டல மாநாட்டில் கருணாநிதி கலந்துகொள்வாரா என்ற கேள்விக்கு, ''ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க மண்டல மாநாட்டில் கருணாநிதி கலந்துகொள்வதற்கான வாய்ப்பு இல்லை'' எனக் கூறினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!