வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (23/03/2018)

கடைசி தொடர்பு:14:26 (23/03/2018)

'வரன் பார்த்துக்கொண்டிருந்தோம்!'- 13 நாள்களுக்குப் பின் உயிரிழந்த டிசிஎஸ் பெண் ஊழியரின் உறவினர்கள் கண்ணீர்

குரங்கணி

குரங்கணி தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த சாய்வசுமதி என்ற டிசிஎஸ் பெண் ஊழியரும், சென்னையைச் சேர்ந்த நிவ்யநிக்ருதி என்ற பெண்ணும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சாய்வசுமதி

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில், கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்ற 18 பேர் பலியாகினர். தீ விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள், மதுரை, தேனி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய்வசுமதி, சிகிச்சை பலனளிக்காமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

இவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தாய் செல்வி மற்றும் இரண்டு அண்ணன்கள் உள்ளனர். சாய்வசுமதி, சென்னையில் உள்ள டிசிஎஸ்  நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவர், குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றபோது, தீயில் சிக்கி 60 சதவிகித காயத்துடன் சிகிச்சைபெற்றுவந்தார். அம்மாவும் அப்பாவும் அருகில் இருந்து சாய்வசுமதியைக் கவனித்துவந்தனர். கடந்த 13 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த  நிலையில், சாய் வசுமதி, சென்னையைச் சேர்ந்த நிவ்யநிக்ருதி ஆகியோர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உயிரிழப்புடன், குரங்கணி தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

சாய்வசுமதி

மதியத்துக்கு மேல்தான் சாய்வசுமதியின் உடல் தஞ்சாவூர் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது. இறுதிச்சடங்கிற்கான பணிகளை உறவினர்கள் செய்துவருகின்றனர். உறவினர் ஒருவரிடம் பேசினோம்.  "சாய்வசுமதிக்கு திருமணம் செய்துவைக்க அவர் அம்மா செல்வி வரன் பார்த்துக்கொண்டிருந்தார். மணக்கோலத்தில் பார்க்கவேண்டியவர், தீக்கு இரையாகி இப்படி மருத்துவமனையில் கிடக்கிறாளே எனக் கதறி அழுகிறார். அவரைத் தேற்ற முடியாமல் நாங்கள் தவித்துவருகிறோம்" எனத் தழு தழுத்தபடி கூறினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க