தமிழக அரசு வழங்கிய 2, 3, 5, 10 ரூபாய்! - விவசாயிகளை கலங்கடித்த பயிர்க்காப்பீடு காசோலைகள் | dindigul farmers receives rs 5, rs 10 for crop insurance policy schemes

வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (23/03/2018)

கடைசி தொடர்பு:13:51 (23/03/2018)

தமிழக அரசு வழங்கிய 2, 3, 5, 10 ரூபாய்! - விவசாயிகளை கலங்கடித்த பயிர்க்காப்பீடு காசோலைகள்

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையாக, ரூ.5, 10, 3 மற்றும் ரூ.2-க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது என தி.மு.க எம்.எல்.ஏ., பிச்சாண்டி, நேற்று தமிழக சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் வெளியிட்டார். 

பயிர்காப்பீடு

தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதம், சட்டப்பேரவையில் நேற்றுடன் நிறைவடைந்தது. அதில், கலந்துகொண்ட தி.மு.க எம்.எல்.ஏ., பிச்சாண்டி, ''மழைபொழிவு, பயிர் கருகுதல் போன்ற நேரங்களில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்விதமாக, தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ விவசாயிகளுக்கு ரூ.3,  4, 5, ரூ.10 என காசோலைகளாக வழுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்துவருகின்றனர்'' என்று தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் இந்தப் புகாரைப் பதிவுசெய்தது மட்டுமல்லாமல், புகாருக்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்தார். அதில், கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, மத்திய கூட்டுறவு வங்கி, போடுவார்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டு இழப்பீடாக, ரூ.5 மற்றும் ரூ.10 -க்கு காசோலை வழங்கியதை ஆதாரத்துடன் சமர்ப்பித்தார். 

மேலும், பயிர்க் காப்பீடு பெற, விவசாயிகள் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். வங்கிக் கணக்கைத் தொடங்க, குறைந்தது 500 ரூபாய் வரை செலவளிக்க வேண்டும். ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை, வெறும் ரூ.5-தான் என்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயிகள், பயிர்க் காப்பீட்டுத் தொகையாக இவ்வளவு குறைவான தொகை வழங்கப்படுவது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தனர்.