ரத யாத்திரை குறித்து தமிழக அரசுக்கு பல கேள்விகளைக் கேட்கும் கனிமொழி | kanimozhi questioned about ratha yathra

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (23/03/2018)

கடைசி தொடர்பு:13:40 (23/03/2018)

ரத யாத்திரை குறித்து தமிழக அரசுக்கு பல கேள்விகளைக் கேட்கும் கனிமொழி

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை குறித்து பல கேள்விகளைத் தனது முகநூல் பக்கத்தில் முன் வைத்துள்ளார் கனிமொழி.

கனிமொழி

ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும், ராமாயணத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அயோத்தியிலிருந்து பிப்ரவரி 13-ம் தேதி ரத யாத்திரை புறப்பட்டது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக 21-ம் தேதி, தமிழக எல்லையான செங்கோட்டை வந்தடைந்தது. அந்த ரதத்துக்கு, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால், அரசியல் கட்சியினர் மற்றும் மற்ற அமைப்புகளின் சார்பாக ரதத்தைத் தமிழகத்துக்கு அனுமதித்ததை எதிர்த்துப் போராட்டம் தொடர்ந்து
நடைபெற்றுவருகிறது
. இந்த ரத யாத்திரை குறித்து பல அரசியல் தலைவர்கள் சட்டசபைகளிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும்
தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

தற்போது தி.மு.க எம்.பி கனிமொழி ரத யாத்திரை குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரத யாத்திரை என்ற பெயரில் தமிழகத்துக்குள் நுழைந்துள்ள வாகனம் கோயில் போன்ற வடிவமைப்புடன் யாத்திரையாக வந்துகொண்டிருக்கிறது. இந்த வாகனம், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியுள்ளதாக இன்று நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனத்தின் பதிவு எண்கள் முன்னும் பின்னும் பிரதானமாகத் தென்பட வேண்டும் . தயாரிக்கப்பட்ட வாகனத்தில் மாறுதலைச் செய்ய, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே சட்டப்படி அனுமதி உண்டு. கோயில்போல மாறுதல் செய்ய விதிகளில் இடமில்லை.  மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 207-ன்படி, பதிவு எண் இல்லாத வாகனம், சட்டத்தின்படி பதிவு செய்யப்படாத வாகனமாகவே கருதப்பட வேண்டும். இந்த வாகனம் தமிழக எல்லைக்குள் நுழைந்த கணமே பறிமுதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர், இந்த வாகனத்துக்குப் பலத்த பாதுகாப்பை வழங்கி, சமூக அமைதியைச் சீர்குலைக்க துணை போய்க்கொண்டுள்ளனர்.

திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்த குற்றத்துக்காக ஒரு இரு சக்கர வாகனத்தை விரட்டிச் சென்று, ஒரு பெண்ணின் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர், சட்டத்தைத் துச்சமாக மதித்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஒரு வாகனத்துக்கு பாதுகாப்பு அளிப்பது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இதில் காவல்துறைத் தலையிட்டு, விதிகளை மீறியுள்ள ரத வாகனத்தை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் எனக் குறிபிட்டுள்ளார்.