சென்னையில் அழகு நிலைய பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி 

பாதிக்கப்பட்ட பெண் (மாதிரிபடம்)

சென்னை, அண்ணா நகரில் உள்ள அழகு நிலைய பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றதோடு, அவரிடமிருந்து நகைகளைப் பறித்துச்சென்ற ஃபைனான்ஸியர் மற்றும் அவரது நண்பர்களை போலீஸார் கைதுசெய்தனர். 

 சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர், லலிதா (பெயர் மாற்றம்). இவர், அண்ணா நகரில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிவருகிறார். இந்த அழகுநிலையத்துக்கு, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் அடிக்கடி வருவதுண்டு. இதனால், லலிதாவுக்கும் ஜெகனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் போனில் பேசுவதோடு, சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர். நட்பாகப் பழகிய ஜெகன், சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் லலிதா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, லலிதாவிடம் அவர்கள் அத்துமீறி நடக்க முயன்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, லலிதா அணிந்திருந்த நகைகளையும் ஜெகன் தரப்பினர் பறித்துச் சென்றுவிட்டனர். 

 தனக்கு நேர்ந்த கொடுமையைப் பெற்றோரிடம் கண்ணீர்மல்க லலிதா கூறினார். தொடர்ந்து, குன்றத்தூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீஸார், ஜெகன் மற்றும் அவரது நண்பர்களைத் தேடிவந்தனர். இந்த நிலையில், லலிதாவின் போனில் தொடர்புகொண்ட ஜெகன், ''உன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன்'' என மிரட்டியுள்ளார். புகைப்படங்களை வெளியிடாமலிருக்க, குறிப்பிட்ட தொகையை ஜெகன் தரப்பினர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலையும் போலீஸிடம் லலிதா தெரிவித்தார்.

 இதனால், ஜெகனை பொறி வைத்துப்பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். ஜெகன் தரப்பினரிடம் போனில் பேசிய லலிதா, ''தயவு செய்து புகைப்படங்களை வெளியிட்டுடாதீங்க, நீங்க கேட்ட பணத்தை நேர்ல வந்து வாங்கிக்கங்க'' என்று கூறினார். அதன்படி, லலிதா குறிப்பிட்ட இடத்துக்கு ஜெகனும், அவரது நண்பர்கள் தேவ் சரண், கிருஷ்ணா ஆகியோர் காரில் வந்தனர். அப்போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திந்த போலீஸார் அவர்களைச் சுற்றிவளைத்தனர். பிறகு, போலீஸ் நிலையத்துக்கு மூன்று பேரையும் அழைத்துவந்து விசாரித்தனர். அதன்பிறகு, பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழும், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவுசெய்து, ஜெகன், தேவ்சரண், கிருஷ்ணா ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கைது செய்யப்பட்ட ஜெகன், ஃபைனான்ஸியராக உள்ளார். இவரது மனைவி வெளிநாட்டில் மேல்படிப்பு படித்துவருகிறார். ஜெகனுக்கும் லலிதாவுக்கும் ஏற்பட்ட பழக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிசெய்ததால், ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இருவரும் வாட்ஸ்அப்பில் பேசிய ஆடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. லலிதா மீதும் தவறு இருக்கிறது. இருப்பினும் லலிதாவிடமிருந்து நகைகளைப் பறித்ததோடு, பணம் கேட்டு மிரட்டியதால் ஜெகன்  மற்றும் அவரது நண்பர்களைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!