'படிக்க வாங்க கண்ணுங்களா..!' குழந்தைகளின் படிப்புக்காக வீல் சேரில் அலைந்த வாடிப்பட்டி 'பொன்னுத்தாய்' கதை! | Story of Vadipatti Ponnuthai

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (23/03/2018)

கடைசி தொடர்பு:17:43 (23/03/2018)

'படிக்க வாங்க கண்ணுங்களா..!' குழந்தைகளின் படிப்புக்காக வீல் சேரில் அலைந்த வாடிப்பட்டி 'பொன்னுத்தாய்' கதை!

பொன்னுத்தாய், ponnuthai

தேனி மாவட்டம் (அன்று, மதுரை மாவட்டம்) உசிலம்பட்டியில், பாப்பாபட்டி கிராமம்தான் வெள்ளையன் - முத்தம்மாளுக்குப் பூர்வீகம். 1886-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு அணையின் கால்வாய்கள் வெட்டும் பணிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள பொட்டுலுபட்டி என்ற இடத்துக்கு வந்த வெள்ளையன் குடும்பம், காலப்போக்கில் அங்கேயே தஞ்சமடைந்துவிட்டது. ராமநாயக்கன்பட்டி இன்ஸ்பெக்டர் நாகபூஜர் என்பவரின் பண்ணைகளில் கூலிவேலை பார்த்துவந்த வெள்ளையனுக்கு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள். 1928-ம் ஆண்டு பிறந்த மூத்த பிள்ளைதான் பொன்னுத்தாய். நாகபூஜருக்கும், வெள்ளையன் குடும்பத்துக்கும் இடையே நல்ல உறவு நிலவியதால், இயல்பிலேயே நல்ல துடிப்பாய் இருந்த பொன்னுத்தாயை வாடிப்பட்டி சத்திரம் பள்ளியில் நாகபூஜர் சேர்த்துவிட்டார். பள்ளியில் பொன்னுத்தாயுடன் சேர்த்து இரண்டு பேர் மட்டும்தான் தலித் பெண் பிள்ளைகள். பொன்னுத்தாய் என்ற பெயரில் 'தாய்' என்ற பெயர் உயர்சாதியைக் குறிப்பதால், 'ஒன்னையெல்லாம் பொன்னுத்தாயினு கூப்பிட முடியாது. வெள்ளையன் புள்ளைனுதான் கூப்பிடுவோம்' என்று ஒரு சில ஆசிரியர்கள் முடிவெடுத்து, வருகைப் பதிவேட்டிலும் பெயரை மாற்றினர்.

இந்த விஷயத்தை அறிந்த சக ஆசிரியர்கள், வருகைப் பதிவேட்டில் 'பொன்னுத்தாய்' என்ற பெயரை மாற்றி, எட்டாவது (மூன்றாம் பாரம்) வரை தொடர்ந்து படிக்க பக்கபலமாக இருந்துள்ளனர். நாகபூஜரின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல்லில் ஆசிரியர் பயிற்சி முடித்துவந்த பொன்னுத்தாய்க்கு, ஊரில் நல்ல வரவேற்பு. அதன்பின், ஊரில் புகார் மனுக்கள், கடிதங்கள், ஆலோசனைகள் எல்லாமே பொன்னுத்தாய்தான். தனது உறவினரான பாலுச்சாமியைத் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு போடிநாயக்கன்பட்டி பள்ளி ஒன்றில் இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சுற்றுவட்டாரத்தில் ஒருபெண் படித்து ஆளாகிவருகிறார்; அதுவும் ஒரு தலித் பெண் இப்படி வளர்ந்துவருவது அப்பகுதி ஆதிக்க சாதியினர் சிலருக்குப் புகைச்சலாகவே இருந்துவர, பல சூழ்ச்சிகள் காரணமாக பொன்னுத்தாயின் ஆசிரியர் பணி பறிக்கப்பட்டது. கல்வியறிவு ஒன்று மட்டும்தான் நம்மை மீட்டெடுக்கும் என்று உறுதியாய் நம்பிய பொன்னுத்தாய், கணவர் மற்றும் அப்பாவின் துணையோடு ஊர் சாவடியில் பள்ளிக்கூடம் நடத்தினார். போடிநாயக்கன்பட்டியில் மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்திருந்த பொன்னுத்தாயின் புதுப்பள்ளிக்கு, அப்பள்ளி மாணவர்கள் திரளாக வந்தனர். ஊரின் ஆதிக்க சாதியினர் பள்ளியை நடத்தவிடாமல் அடித்து விரட்டினர். சற்றும் மனம் தளராத பொன்னுத்தாய், மரத்தடியில் ஓலைக்குடிசையின்கீழ் வகுப்பு எடுத்தார். அங்கும் அவர்களின் அடக்குமுறை அரங்கேறியது.

காந்திஜி பள்ளி

1953-ல், பொட்டுலுபட்டியில் குடும்பத்தோடு குடியிருந்த வீட்டை இடித்து, மாவட்டக் கல்வித்துறையில் தற்காலிக அனுமதி வாங்கி, இரண்டு ஆசிரியர்களை நியமித்து பள்ளியை நடத்தத் தொடங்கினார். வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று, காடு கரைகளில் ஆடு மாடு மேய்ப்பவர்களிடம் போய், கிராமியப் பாடல் பாடி குழந்தைகளைப் படிக்க அனுப்பிவைக்குமாறு கேட்டார். தொடர் போராட்டத்தின்மூலம் 150 குழந்தைகளைப் பள்ளியில் சேர்ந்தனர். போடிநாயக்கன்பட்டி பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து பொன்னுத்தாய் பள்ளியில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த நிலக்கோட்டை சரகம் மற்றும் மாவட்டக் கல்வித்துறை, 1954-ல் பள்ளிக்கு அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியின் நிரந்தர அங்கீகாரத்தை அளித்தது. அந்தக் காலகட்டத்தில், அப்பகுதிகளில் காங்கிரஸ் இயக்கம் தீவிர களப்பணியில் இருந்தது. இதுபோக, காந்தியின் அரிஜன சேவா சங்கமும் தீண்டாமை ஒழிப்பு செயல்பாடுகளில் இருந்தது. இந்த அமைப்புகளோடு பொன்னுத்தாய்க்கு நட்புறவு உண்டானது. மதுரைப் பகுதிகளில் தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் மிகத் தீவிரமாக இருந்த அரிஜன சேவா சங்க உறுப்பினர் ஆனந்த தீர்த்தாவின் அறிமுகமும் கூடுதலாய்க் கிடைக்க, பொன்னுத்தாயின் சமூக விழிப்பு உணர்வு மற்றும் கல்விப் புரட்சி நகர்வுகள், சுற்றுவட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. 1960-ல் தனது சொந்தச் செலவில் 110 ரூபாய்க்கு 10 சென்ட் இடம் வாங்கி, ஓட்டுத் தாழ்வாரம் போட்ட பள்ளியைக் கட்ட திட்டமிட்டார் பொன்னுத்தாய். இதற்கு, முன்னாள் அமைச்சர் கக்கன் அடிக்கல் நாட்ட, ஆனந்த தீர்த்தாவின் அறிமுகத்தால் பள்ளிக்கு 'காந்திஜி ஆரம்பப் பள்ளி' என்று பெயர் வைத்தார். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என்று எட்டு ஆசிரியர்களோடு சுமார் 850 மாணவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் படித்தனர். 'இவிங்க படிச்சா வயக்காட்டு வேலைக்கும், கூலி வேலைக்கும் வர மாட்டாய்ங்க, நம்மள மதிக்கவும் மாட்டாய்ங்க' என்று எவ்வளவு பிரச்னைகள் செய்தும் பொன்னுத்தாயின் வளர்ச்சியைத் தடுக்க முடியாத ஆதிக்க சாதியினர் சிலர், ஊர்த் திருவிழாக்களின்போதும், ஊர்வலங்களின் போதும்  பள்ளியை அடித்து நொறுக்குவதையும், தீ வைப்பதையும் வாடிக்கையாய் வைத்திருந்தனர். இதனாலேயே நல்ல நாள், கெட்ட நாள்களில் காவல் நிலையத்துக்குப் போய் பாதுகாப்பு வேண்டி மனுக் கொடுப்பது வழக்கமாகிப்போனது.

1980-ல், சாமி ஊர்வலத்தில் உண்டான கலவரத்தில், ஆதிக்க சாதியினரால் பள்ளி முழுவதுமாய் அடித்துச் சிதைக்கப்பட்டது. இத்தோடு பொன்னுத்தாயின் கதை முடிந்தது என்று நினைக்கையில், இடிந்துபோன பள்ளிக்குள் குழந்தைகளை உட்காரவைத்து பாடம் நடத்தியது எல்லோரையும் உறையவைத்தது. அதன்பின், பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்து, பள்ளியை நடத்துவதிலேயே சிக்கல் உண்டானது. அப்போதுதான் பொன்னுத்தாய்க்கு வை.பாலசுந்தரம் நடத்திய அம்பேத்கரிய மக்கள் இயக்கத்தின் அறிமுகம் கிடைத்து, பள்ளியைப் படிப்படியாக மீட்டெடுக்க முயற்சிகள் நடந்தன. அம்பேத்கரிய மக்கள் இயக்கத்தின் மாநில மகளிர் அணித் தலைவியானார் பொன்னுத்தாய். நாளடைவில், அந்த இயக்கம் காலாவதியானது. என்னதான் காங்கிரஸ், தலித் அமைப்புகளோடு தொடர்பில் இருந்து செயல்பட்டாலும், அதனால் பள்ளியின் செயல்பாடுகளுக்கு எவ்வித குறையும் வந்துவிடக் கூடாது என்று தீவிர அரசியலில் ஈடுபடாமல் உறுதியாய் இருந்தார் பொன்னுத்தாய். தமிழகம் முழுக்க ஆங்கிலவழி கல்விச்சூழல் அதிகரிக்க ஆரம்பித்தது. 1998 கால அளவிலிருந்து வாடிப்பட்டி சரகத்தில் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகப்பெருக, முற்றிலும் இலவசமான தமிழ்வழிக் கல்வியான பொன்னுத்தாய் பள்ளி முடங்கத் தொடங்கியது. முதுமையில், நீரிழிவு நோயின் காரணமாக ஒரு காலை எடுத்த நிலையிலும் வண்டியில் உட்கார்ந்துகொண்டு, ``படிக்க வாங்க கண்ணுங்களா!'' என்று வீடு வீடாகச் சென்றார். 

நாகேஸ்வரன்பள்ளியைப் புதுப்பிக்க வாழ்வின் இறுதிவரை போராடி, 2002-ல் தனது 74-ம் வயதில் பொன்னுத்தாய் மரணமடைந்தார். உள்ளூர் கேபிள் சேனல்களில் அவரது இறுதிச்சடங்கை ஒளிபரப்பும் அளவுக்கு மக்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்துசென்றார். அதன்பிறகு, பொன்னுத்தாயின் மகன்களும் பேரன், பேத்திகளும் தலை எடுக்க ஆரம்பித்தனர். பொன்னுத்தாயின் மூத்த மகனான நாகேஸ்வரன், இதே பள்ளியில் படித்தவர். பிறகு 10-வது படித்து முடித்து, வத்தலகுண்டில் ஆசிரியர் பயிற்சியையும் நிறைவுசெய்து, தனது அம்மாவின் பள்ளியை கையில் எடுக்கிறார். அதே பள்ளியிலேயே தலைமையாசிரியராகவும் (1972-2009) ஆனார். தனது அம்மாவின் போராட்ட வாழ்க்கையைக் கூடவே இருந்து பார்த்த நாகேஸ்வரன், இந்தப் பள்ளியைத் திரும்பவும் கட்டியெழுப்ப வேண்டுமென்று தீவிர முயற்சிசெய்துவருகிறார். மாவட்டத்திலுள்ள எல்லாக் கல்வி அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும் சந்தித்து, 2014-ம் ஆண்டு தேனி நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வாடிப்பட்டி பேரூர் நிதியில் இருந்து இரண்டு வகுப்பறைகள் கட்டி தற்போது எவ்வித கட்டணமுமின்றி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 80 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் என்று பட்டுப்போன பள்ளியை மீண்டும் ஒரு செடிபோல வளர்த்து வருகிறார்.

இதே பள்ளியில் படித்து, தற்போது கட்டடக் கலை நிபுணராக இருக்கும் நாகேஸ்வரனின் மகன் தனபால், ஆரம்பத்தில் இந்தப் பள்ளியை எடுத்து நடத்த நாட்டமில்லாமல்தான் இருந்திருக்கிறார். வெளியூர்களிலும், உள்ளூர்களிலும் தனது பாட்டியின் பெருமைகளைப் பற்றிப் பிறர் பேசும்போதுதான், சிறுவயதில் பாட்டியுடன் தான் பயணித்த அனுபவங்கள், நேரடியாகப் பார்த்த போராட்டச் சம்பவங்கள் எல்லாவற்றையும் நினைத்து, பாட்டியின் புரட்சி வாழ்க்கைக்குக் கிடைத்த இந்தப் பள்ளியை இறுதிவரை கைவிடாமல் நடத்த வேண்டும் என்று தனது அப்பாவுக்கு உதவியாகப் பள்ளியின் கல்விக்குழுத் தலைவராக உள்ளார்.

தனபால்

வெவ்வேறு ஊர்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வேலை பார்த்து, தற்போது இந்தப் பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களோடு வழக்கமான ஆசிரியர், மாணவர் உறவுமுறைகள் என்ற வரைமுறைகள் இல்லாமல் ஒரு குடும்பமாகத்தான் இருந்துவருகிறார்கள். 80 மாணவர்களிடமும் தனித்தனியே உள்ளார்ந்து பழகிவருகின்றனர்; மாணவர்களும் அப்படியே பழகுகின்றனர். வாரம் ஒரு குழந்தைகள் திரைப்படம் திரையிடல், பறையிசை, நாடகம், கதைசொல்லல், பாடல், ஓவியம், நடனம், களிமண், காகிதங்களில் சிற்பங்கள் செய்தல், எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பயணங்கள் என்று கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கலைவழியே தமிழ்வழிக் கல்வியை கற்பிக்கின்றனர். பள்ளியின் தரத்தை இன்னும் உயர்த்தவும், மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கவும், தமிழ்வழிக் கல்வி பற்றி பெற்றோர்களிடம் விழிப்பு உணர்வு உண்டாக்கவும், ஆசிரியர்களும் தங்களைத் தொடர்பியல்ரீதியாகவும், கலைரீதியாகவும் புதுப்பித்துக்கொள்கின்றனர்.

காந்திஜி பள்ளி

வாடிப்பட்டியில் பெருகியுள்ள தனியார் பள்ளிகளுக்கு நடுவே, காந்திஜி ஆரம்பப் பள்ளி எங்கு  இருக்கிறதென்று கேட்டால், யாருக்கும் தெரியாது. 'பொன்னுத்தாய் பள்ளி' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இந்தப் பெயர் சதாரணமாகக் கிடைத்தது இல்லை. 64 ஆண்டுகளுக்கு முன் பொன்னுத்தாய் என்ற ஒரு தனி மனுஷி, தனது சொந்த ஊரில் நிகழ்த்திக் காட்டிய சமூக நீதி, கல்விப் புரட்சியின் விளைவாகக் கிடைத்தது. இந்திய, தமிழகக் கல்விச் சூழலில், குறிப்பாக தலித் கல்விப்புரட்சி வரலாற்றில் பொன்னுத்தாய் களமாடிய காலங்கள் எவராலும் மறைக்க முடியாது; மறக்கவும் முடியாது. 10 சென்ட் இடத்தில் இருக்கும் அந்த இரண்டு வகுப்பறைகளும் ஆசிரியர்களும்,  மாணவர்களும்தான் பொன்னுத்தாயின் புரட்சிக்கான சாட்சி.


டிரெண்டிங் @ விகடன்