திருநங்கைகளின் திறமையை வெளிப்படுத்தும் நாள்! | The special day for expressing the talents of the transgender

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (23/03/2018)

கடைசி தொடர்பு:18:50 (23/03/2018)

திருநங்கைகளின் திறமையை வெளிப்படுத்தும் நாள்!

திருநங்கைகளைச் சமூகத்தில் சகமனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்ற விழிப்புஉணர்வை வலியுறுத்தி அடுத்த மாதம் திருநங்கைகள் சார்பில் விழா நடத்தப்பட உள்ளது.

திருநங்கைகள்

வேலூரில் திருநங்கைகளின் சார்பாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பின் தலைமையை வேலூர் திருநங்கைகள் அமைப்பின் தலைவியும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புச் செயலாளராகவும் உள்ள கங்கா நாயக்  தொடங்கினார். திருநங்கைகளின் தினத்தை முன்னிட்டு, திருநங்கைகள் கலை விழா வரும் ஏப்ரல் மாதம் 15-ம் நாள் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா கலையரங்கத்தில் சிறப்பாக நடத்த இருப்பதாகக் கூறியுள்ளனர்.  
 

இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளின் வாழ்வியல் குறித்த குறும்படங்கள், புகைப்படக் கண்காட்சி, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு  உதவும் நல் உள்ளங்களுக்கு `Behind the success’ விருதும் தொழில் நிறுவனங்களிடமிருந்து திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், திருநங்கைகளின் அறிவு மற்றும் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் `Miss South India 2018’ நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்க நடிகை ராதா, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபில் மற்றும் வி.ஐ.டி-யின் நிறுவனர் விஸ்வநாதன் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து கங்கா நாயக் கூறுகையில், ``கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், தமிழகம், புதுச்சேரி, தெலங்கானா, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து கலந்துகொள்ள உள்ளனர். இந்த
விழாவின் முக்கிய நோக்கமே, மக்களுக்கு எங்கள்மீது இருக்கும் எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும் என்பதுதான். 

இந்தச் சமூகத்தில் ஓர் ஆண் தவறு செய்தால், அனைத்து ஆண்களையும் குறை சொல்வதில்லை. ஒரு பெண் தவறு செய்தால்
அனைத்துப் பெண்களையும் குறை சொல்வதில்லை. ஆனால், ஒரு திருநங்கை தவறு செய்தால் அனைத்து திருநங்கைகளையும்  
அதே கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். எங்களையும் சமூகத்தில் சகமனிதர்களாகப் பார்க்க வேண்டும். நாங்களும் உங்களில் ஒருவர்தான் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் திருநங்கைகளுக்கான அரசு
திட்டங்கள் பற்றிய விழிப்புஉணர்வு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளோம் எங்களின் மிகப்பெரிய பிரச்னைகளையே
வேலையின்மைதான். வேலைவாய்ப்பைத் திருநங்கைகளுக்காக அளிக்கும் நல்ல உள்ளங்களை வரவேற்கிறோம்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க