`தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்!' - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி | Court opening ceremony at nagercoil

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (23/03/2018)

கடைசி தொடர்பு:15:45 (23/03/2018)

`தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்!' - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிப்பது மட்டும் முக்கியமானது அல்ல. அந்த வழக்குகளின் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது என்றார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆகியவை திறப்பு விழா மற்றும் இரணியல், பத்மநாபபுரத்தில் கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு விழா இன்று நடந்தது. புதிய நீதிமன்றங்களைத் திறந்துவைத்துப் பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கோர்ட்டுகளில் வழக்குகளை விரைந்து முடிப்பது மட்டும் முக்கியமானது அல்ல. அந்த வழக்குகளின் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. இங்கு குடும்ப நல நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோர்ட்டில் வரும் வழக்குகளைக் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு வக்கீல்கள் முதலில் சுமுகமாகப் பேசித் தீர்வுகாண முயற்சி செய்ய வேண்டும். நீதித்துறை தனித்துவம் வாய்ந்தது. இந்தக் துறைக்கென்று தனியாக நிதி எதுவும் கிடையாது. உள்கட்டமைப்பு வசதிகளான கூடுதல் கட்டடம் பணியாளர் நியமனம் போன்ற வசதிகளை ஏற்படுத்த மாநில அரசுகளைச் சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எங்கள் பரிந்துரையை ஏற்று நிறைவேற்றி வருவதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி'' என்று கூறினார்.

நாகர்கோவில் கோர்ட்டு திறப்பு விழா

இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில், `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் ஆறு வாரக் காலம் அவகாசம் கொடுத்திருக்கிறது. அந்த அவகாசம் வரும் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்தால் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்வது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சட்டத்துக்கும் சட்ட விதிகளுக்கும் உட்பட்டு ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கான உத்தரவு விரைவில் வரும்’ என்றார்.