3 மாவட்டத்தை தாண்டிவந்த குட்கா லாரி! - சம்பளம் தராததால் சிக்கவைத்த டிரைவர் | Gutka smuggling in lorry - police seized the lorry

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (23/03/2018)

கடைசி தொடர்பு:16:00 (23/03/2018)

3 மாவட்டத்தை தாண்டிவந்த குட்கா லாரி! - சம்பளம் தராததால் சிக்கவைத்த டிரைவர்

குட்கா லாரி- டிரைவர்

தமிழகத்தில் முழுவதுமாக குட்கா, பான் மசாலா போன்ற போதை வஸ்துகள் அழித்தாகிவிட்டன எனச் சட்டசபையில் முதல்வர் தெரிவித்தார். ஆனால், முதல்வர் மாவட்டமான சேலம் டோல் கேட்டில் 75 மூட்டை குட்கா போதை தடுப்புப் பிரிவு போலீஸாரால் பிடிக்கப்பட்டது. இந்தக் குட்காவின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.

பெங்களூருவிலிருந்து லாரி மூலம் சேலம், ஈரோடு, கோவை கொண்டு செல்லுவதற்காக குட்கா மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக  மூன்று சுங்கச்சாவடிகளைத் தாண்டி சேலம் சுங்கச்சாவடி வரும் போது சேலம் காவல்துறையினர் இந்த லாரியை மடக்கிப்பிடித்தார்கள். இந்த மூடப்பட்ட லாரியின் முன் பகுதியில் பிளாஸ்டிக் கிரேடில் தக்காளியும் அதன் பின்புறம் 75 குட்கா மூட்டைகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த லாரியின் உரிமையாளர் மாதேஸ் சேலம் மெய்யனூர் பகுதியைச் ஞானகெளரிசேர்ந்தவர்.

இதைப்பற்றி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் ஞானகெளரி, ``அரசியல்வாதிகள், காவல்துறை பின்புலம் இல்லாமல் ஒரு லாரியில் 3 டோல் கேட்டுகள் தாண்டி இங்கு வர வாய்ப்பு இல்லை. இது ஒரு நாள் நடக்கும் தவறாகக் கருத முடியாது. இந்தளவுக்குத் துணிந்து கொண்டு  வருகிறார்கள் என்றால் பலமுறை வந்த தைரியத்தால்தான் வந்திருக்கிறார்கள். காவல்துறை பிடித்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சியளித்தாலும், இதற்குப் பின்புலமாக இருப்பவர்களை உடனே விசாரித்து கைது செய்ய வேண்டும்'' என்றார்.

இதைப்பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, `` ரெகுலராக ஓட்டும் டிரைவர் சம்பளம் அதிகமாகக் கேட்டதால் வேறு ஒரு டிரைவரை போட்டு ஏற்றி வரச் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கடுப்பில் பழைய டிரைவர் போன் பண்ணி காவல்துறைக்குச் சொன்னதை அடுத்து சேலம் டோல்கேட்டில் காத்திருந்தோம். வண்டி வந்ததும் மடக்கிப் பிடித்துவிட்டோம்'' என்றார்கள்.