வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (23/03/2018)

கடைசி தொடர்பு:14:58 (23/03/2018)

யார் இந்த தம்ம சூரிய நாராயண சாஸ்திரி?!  - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் சர்ச்சை

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

மிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, புனே பல்கலைக்கழகப் பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. `ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் துணைவேந்தர் பதவிக்கு தம்ம சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் தேடுதல் குழு பரிந்துரைத்த பெயர்களை ஆளுநர் நிராகரித்துவிட்டார்' என்கின்றனர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். 

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் இயங்கும் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மாநிலம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறது. இதன் துணைவேந்தராக இருந்த வணங்காமுடியின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய துணைவேந்தரைத் தேடும் பணிகள் தொடங்கின. இதற்கான குழுவின் தலைவராக நீதியரசர் ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் பதவிக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, பேராசிரியர்கள் வின்சென்ட் காமராஜ், டேவிட் அம்புரோஸ், பாலு ஆகிய மூவரது பெயர்களை ஆளுநருக்குப் பரிந்துரைத்தது ஜெகதீசன் குழு. இந்த மூவரது பெயர்களையும் நிராகரித்துவிட்டு, தம்ம சூரிய நாராயண சாஸ்திரி பெயரைத் தேர்வு செய்திருக்கிறார் ஆளுநர். இதுகுறித்து நேற்று பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ' தேர்வுக்குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களையும் தவிர்த்துவிட்டு முனைவர் சூரியநாராயணசாஸ்திரி என்பவரைச் சட்டப்பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்படுவார் எனச் செய்தி வெளியாகியுள்ளது. 2009-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பல்கலைக் கழகத்தில் இளநிலை சட்டக்கல்வி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அப்போது அவர்மீது வந்த புகார்களின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்.  தற்போது புனே பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் எந்தவகையிலும் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்குத் தகுதியற்றவர் எனக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆசியும் பிரதமர் அலுவலகத் தலையீட்டிலும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்' எனப் பேட்டியளித்தார். 

மார்க்ஸ் ரவீந்திரன்துணைவேந்தர் நியமனம் குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மார்க்ஸ் ரவீந்திரன், " புதிய துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் அளித்த பட்டியலில் இருந்த மூவரில், பாலு என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியின் டீனாக இருந்தவர். தற்போது தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதிகப்படியான தகுதிகள் உள்ளவராக இவரைப் பார்க்கின்றனர். இவருக்கு எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை. மற்றவர்களில் ஒருவருக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு கொடுத்தார்.

இந்த மூவரைத் தாண்டி, வேறொருவர் நியமிக்கப்பட்டிருப்பதில் விதிமீறல்கள் நடந்துள்ளன. ஆந்திராவைப் பின்புலமாகக் கொண்டவர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரி. சம்ஸ்கிருத மொழியின் மீது அதிகப் பாசம் கொண்டவர். சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது, அதைப் பலமுறை வெளிப்படுத்தியவர். இதன் காரணமாக, அவர் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரித்து, வேறொருவரைக் கொண்டு வந்ததன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. இதனை நீதிமன்ற அவமதிப்பாகவே நாங்கள் பார்க்கிறோம்" என்றார் கொதிப்புடன். 

சூரிய நாராயண சாஸ்திரி குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர், " இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் பிரிவில் சூரிய நாராயண சாஸ்திரி பணிபுரிந்தார். ஆனால், மதரீதியான உணர்வுகளில் அதிக நாட்டமுடையவர். அவருடைய அறையில் ஒருபுறம் கிருஷ்ணர் படத்தையும் மறுபுறம் கார்ல் மார்க்ஸ் படத்தையும் வைத்திருப்பார். `உலகின் முதல் கம்யூனிஸ்ட் கிருஷ்ணர்தான். அவருடைய வாழ்வியல் முறைகளைத்தான் மூலதனமாகக் கொண்டு வந்தார் மார்க்ஸ்' என வெளிப்படையாகப் பேசுவார். இங்கு பணிபுரிந்த காலத்தில், அவர் மீது வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை" என்கின்றனர். 

துணைவேந்தர் நியமனம் குறித்து ஆளுநர் அலுவலக வட்டாரங்களில் பேசியபோது, ``துணைவேந்தரை நியமிப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உள்ளது. தேடுதல் குழு என்பது மூவரது பெயர்களை மட்டுமே பரிந்துரைக்கும். அதில், திறமையான ஒருவரை ஆளுநர் தேர்வு செய்வார். இந்த மூவர் பெயரில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லையென்றால், தகுதிவாய்ந்த ஒருவரை அவரே நியமிக்கலாம். ஆளுநர் முடிவில் யாரும் தலையிட முடியாது. சட்டத்துறையில் மிகச் சிறந்த கல்வியாளராகப் பார்க்கப்படுகிறவர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரி. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரையும் தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக நியமிக்க முடியும். இதில் எந்தவித விதிமீறல்களும் நடக்கவில்லை" என்கின்றனர்
 


டிரெண்டிங் @ விகடன்