Published:Updated:

`கண்ணகிக்கு பிரமாண்ட சிலை; 6 மையக் கருத்துகள்!'- சென்னையில் 11-வது இந்து ஆன்மிக கண்காட்சி

தொடக்க விழாவில் மாதா அமிர்தானந்தமயி
தொடக்க விழாவில் மாதா அமிர்தானந்தமயி

பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சிக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.

இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் தொடங்கியது. தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிகம் சார்ந்த ஒரே கண்காட்சி என்ற பெருமையைக் கொண்டது இந்து ஆன்மிக கண்காட்சி. கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி படிப்படியாக வளர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

கண்காட்சி நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி
கண்காட்சி நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும் பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இக்கண்காட்சியை நடத்தி வருகின்றன. இக்கண்காட்சியானது, `மனிதர்களுக்குச் செய்யும் சேவையே மோட்சத்துக்குச் செல்லும் வழி' என்ற கருத்தையும், `ஒவ்வொரு அணுவிலும் இறையாற்றல் பொதிந்துள்ளது' என்ற கருத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும், வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை வளர்த்தல் ஆகிய 6 மையக் கருத்துகளை முன்வைத்து 6 நாள்கள் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

Vikatan

நேற்று நடந்த நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். `பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சிக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் கட்டணமின்றி அணுமதிக்கப்படுவர்' என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

கண்காட்சியின் 6 மையக் கருத்துகளில் ஒன்றான `பெண்மையைப் போற்றுதல்' என்ற கருத்தை மையமாக வைத்து இந்தாண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. பத்தினி தெய்வமான கண்ணகியைக் கண்காட்சியின் அடையாளச் சின்னமாக வைத்துள்ளனர். இதற்காகக் கண்காட்சி அரங்கத்தின் முன்பு கண்ணகிக்கு பிரமாண்டமாக சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆன்மிகம் தொடர்பாக நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் போட்டிகள், கலை கலாசார ஆன்மிக நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த ஆண்டு இன்னும் அதிகமானோர் கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு