Published:Updated:

``உன் பொண்டாட்டி மதிக்க மாட்டாள்னு சொல்லியும் என் கணவர் பின்வாங்கலை!" - 12 பட்டங்கள் பெற்ற நீலா

பட்டம் பெறும் நீலா

``நிர்மலா சீதாராமன் மேடம் கையால நான் பட்டம் வாங்கினதும், என் கோர்ஸ் பத்தி அவங்க கேட்டாங்க. அந்த நேரத்தை நல்ல வாய்ப்பா பயன்படுத்தி, என் கணவர் எனக்காக மெனக்கெட்டது பத்தி அவங்ககிட்ட சொன்னேன். அவங்க கொஞ்சமும் தயங்காம, உடனே என் கணவரைப் பெருமைப்படுத்தி மேடையில பேசினாங்க..."

``உன் பொண்டாட்டி மதிக்க மாட்டாள்னு சொல்லியும் என் கணவர் பின்வாங்கலை!" - 12 பட்டங்கள் பெற்ற நீலா

``நிர்மலா சீதாராமன் மேடம் கையால நான் பட்டம் வாங்கினதும், என் கோர்ஸ் பத்தி அவங்க கேட்டாங்க. அந்த நேரத்தை நல்ல வாய்ப்பா பயன்படுத்தி, என் கணவர் எனக்காக மெனக்கெட்டது பத்தி அவங்ககிட்ட சொன்னேன். அவங்க கொஞ்சமும் தயங்காம, உடனே என் கணவரைப் பெருமைப்படுத்தி மேடையில பேசினாங்க..."

Published:Updated:
பட்டம் பெறும் நீலா

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 41 பேர் பட்டம் பெற்ற அந்த விழாவில், கடைசியாக மேடை ஏறிய நீலா, மொத்தக் கூட்டத்தையும் தன் வசப்படுத்தினார்.

திருமணத்துக்குப் பிறகு, தங்களின் விருப்பப்படி உயர்கல்விக்குச் செல்வதோ, வேலைக்குப் போவதோ பெண்கள் பலருக்கும் சவாலான கனவாக இருக்கிறது. ஆனால், பத்தாவது வரை மட்டுமே படித்த நீலாவின் கணவர், தன் காதல் மனைவியை 12 பட்டங்கள் பெற வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

பட்டமளிப்பு விழாவில் நீலா..
பட்டமளிப்பு விழாவில் நீலா..

இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தன் கணவரின் ஊக்கம் குறித்து நீலா விவரித்தார். உடனே அந்த விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி, நீலாவையும் அவரின் கணவர் ஷேக் காதரையும் பெருமைப்படுத்தினார் நிர்மலா சீதாராமன். இதனால், கூட்டத்தினரின் கரவொலிக்கு மத்தியில், அந்த விழாவின் பேசுபொருளாகவும் இவர்கள் இருவரும் லைக்ஸ் அள்ளினர்.

சேலத்தைச் சேர்ந்த நீலா, 12-ம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தவர். அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் வாழ்த்தும் பரிசும் பெற்ற இவர், தன் தந்தையின் விருப்பப்படியே பி.எஸ்ஸி நர்சிங் முடித்தார். பிறகு, காதல் திருமணம். தன்னால் ஒரு டிகிரிகூட படிக்க முடியாவிட்டாலும், தன் மனைவி விரும்பிய படிப்பையெல்லாம் படிக்க வைத்து, நீலாவின் ஆசையைப் பூர்த்தி செய்து, தன் ஏக்கத்தையும் போக்கிக்கொண்டார் ஷேக் காதர். நீலாவிடம் பேசினோம். அருவியாகக் கொட்டுகின்றன, அவரின் உற்சாக வார்த்தைகள்.

கணவர், மகள், மருமகனுடன் நீலா...
கணவர், மகள், மருமகனுடன் நீலா...

``என் கணவர் தர்மபுரியைச் சேர்ந்தவர். எங்க காதலுக்கு ரெண்டு வீட்டுலயும் பயங்கர எதிர்ப்பு. ரெண்டு பேரும் குடும்பத்தைப் பிரிஞ்சு கலப்புத் திருமணம் பண்ணிகிட்டோம். சேலத்திலேருந்து நான், அவர் ஊரான தர்மபுரியில குடியேறினேன். அவர் தனியார் பஸ் டிரைவரா வேலை செஞ்சார்.

`நீ படிச்சிருக்கே; அவர் படிக்காதவர். ரெண்டு பேருக்கும் செட் ஆகாது'னு பலரும் எனக்கு அட்வைஸ் பண்ணாங்க. `அவர் மனசுதான் எனக்கு முக்கியம். என்னை நல்லா பார்த்துப்பார்'னு உறுதியா சொன்னேன். எந்த விதத்துலயும் அவர் எனக்குக் குறைவெச்சதில்லை. ஆரம்பத்துல பொருளாதார ரீதியா ரொம்ப கஷ்டப்பட்டோம். வைராக்கியமா குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தார்.

கல்யாணத்துக்கு அப்புறமா சில கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். `உன் மனைவி உன்னைவிட அதிகமா படிச்சுகிட்டே போனா, உன் பேச்சைக் கேட்கமாட்டாள்'னு என் கணவரைப் பலரும் உசுப்பேத்தினாங்க. அதையெல்லாம் அவர் கண்டுக்கல. கடன் வாங்கி என்னைப் படிக்க வெச்சார். `என்னாலதான் படிக்க முடியல. நீயாச்சும் உன் விருப்பம்போல படி'னு சப்போர்ட் பண்ணார்" என்று கணவரின் ஊக்கத்தை எடுத்துச் சொல்லும் நீலா, எம்.எஸ்ஸி, பி.ஏ, எம்.ஏ, உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்து, தனியார் கல்வி நிறுவனத்தில் வேலைக்குச் சென்றிருக்கிறார்.

கருணாநிதியிடம் பரிசு வாங்கும் மாணவியாக....
கருணாநிதியிடம் பரிசு வாங்கும் மாணவியாக....

2018-ல் சிக்கலான சில அறுவைசிகிச்சைகள் நீலாவுக்கு நடந்திருக்கின்றன. அதன்பிறகு, பிஹெச்.டி ஆராய்ச்சியுடன், புதிய படிப்புகளைப் படிக்கவும் விருப்பப்பட்டிருக்கிறார். அதற்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் ஷேக் காதர். நேரடி மற்றும் தொலைதூரக்கல்வி முறையில் புதிதாக எட்டுப் பட்டப் படிப்புகளை முடித்திருக்கிறார் நீலா. அந்த வரிசையில் `ஹீமோடயாலிசிஸ்' என்ற தலைப்பில் ஆராய்ச்சியை முடித்து, 12-வது பட்டத்தை இப்போது பெற்றிருக்கிறார். அதற்கான பட்டமளிப்பு விழாவில்தான் தன் கணவரின் பெருமையை ஊரறியச் செய்திருக்கிறார்.

``என் கணவருக்குப் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் பத்தியெல்லாம் பெரிசா தெரியாது. எனக்குப் பட்டம் தர்றாங்கன்னுதான் அவரைச் சென்னைக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன். அந்த விழாவுல ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட உயர்பொறுப்புல இருக்கிற பலரும் கலந்துகிட்டாங்க. அவங்களையெல்லாம் பார்த்து, `இது இவ்ளோ பெரிய விழாவா? இதுல உனக்குப் பட்டம் தர்றாங்கன்னா பெரிய படிப்பு முடிச்சிருக்கப்போல...'னு வெள்ளந்தியா என் கணவர் கேட்டார். அவரை எப்படியாச்சும் பெருமைப்படுத்தணும்ங்கிற எண்ணம் மட்டும்தான் என் மனசுல ஓடிக்கிட்டிருந்துச்சு.

நீலா...
நீலா...

நிர்மலா சீதாராமன் மேடம் கையால நான் பட்டம் வாங்கினதும், என் கோர்ஸ் பத்தி அவங்க கேட்டாங்க. அந்த நேரத்தை நல்ல வாய்ப்பா பயன்படுத்தி, என் கணவர் எனக்காக மெனக்கெட்டது பத்தி அவங்ககிட்ட சொன்னேன். அவங்க கொஞ்சமும் தயங்காம, உடனே என் கணவரைப் பெருமைப்படுத்தி மேடையில பேசி, கைதட்டினாங்க. எனக்கு அளவுகடந்த சந்தோஷமா இருந்துச்சு. என் கணவருக்கு இன்ப அதிர்ச்சி. விழா முடிஞ்சதும் என் கணவரை நேர்லயும் பலர் வாழ்த்தினாங்க. என் கணவரை நான் பெருமைப்படுத்த காரணம், பெண்கள் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு அப்புறமும் அவரவர் விருப்பப்படி செயல்படச் சுதந்திரமும் ஊக்கமும் கிடைக்கணும். இதுக்கான விழிப்புணர்வா இருக்குமேன்னுதான் அந்த மேடையை நல்ல விதத்துல பயன்படுத்திக்கிட்டேன்" என்று மகிழ்ச்சியுடன் முடித்தார் நீலா.