Published:Updated:

நெல்லையில் தலைதூக்கும் கொரோனா? சித்த மருத்துவக் கல்லூரியில் 12 மாணவிகளுக்கு தொற்று உறுதி!

மாணவிக்கு கொரோனா பரிசோதனை
மாணவிக்கு கொரோனா பரிசோதனை

அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தற்போது வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் செய்முறைத் தேர்வுக்கு மாணவ மாணவிகள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் 12 மாணவிகளுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சக மாணவர்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கல்லூரிகளில், மருத்துவத்துறை மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அரசு சித்த மருத்துவக் கல்லூரி
அரசு சித்த மருத்துவக் கல்லூரி
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: முதல் இரண்டு இடங்களில் சென்னை, நெல்லை மருத்துவக்கல்லூரிகள்!

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு 16-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு செப்டம்பர் 13-ம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்க இருப்பதால் தற்போது மாணவர்கள் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளில் சிலருக்கு தொடர்ச்சியாகக் காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் விடுதியில் தங்கிப் படிக்கும் சேலம் மாணவி ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் 100 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், அதில் நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனைக்குச் செல்லும் மாணவிகள்
கொரோனா பரிசோதனைக்குச் செல்லும் மாணவிகள்

இதனால் அவர்கள் அனைவரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிற மாணவிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளில் 174 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில், அதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மொத்தம் இதுவரை 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுடன் தொடர்பில் இருந்த விடுதி மாணவிகள், மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவமனையில் பணியாற்றுவோர் என 200 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் நாளை தெரியவரும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
``கொரோனா இந்தியாவில் எண்டெமிக் நிலையை எட்டியிருக்கலாம்!" - விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

தற்போது விடுதியில் பயிலும் அனைத்து மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதனிடையே, செய்முறைத் தேர்வுக்காக மாணவிகள் தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு சமூக இடைவெளியோடு பல்கலைக் கழகத் தேர்வுகளை நடத்த சித்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை மாநகரப் பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாள்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் இப்போது அதிகரித்திருப்பது நெல்லை மாநகர மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு