வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (23/03/2018)

கடைசி தொடர்பு:17:15 (23/03/2018)

டி.ஜி.பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற காவலர்களுக்கு ஜாமீன்!

டி.ஜி.பி. அலுவலகம் முன்பாகத் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தற்கொலைக்கு முயன்ற காவலர்கள்


தேனி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிவரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில், உரிய காரணமின்றி பணியிடமாற்றம் செய்யப்படுவதாகக் கூறிக் கடந்த 22-ம் தேதி புகார் மனு அளித்தனர். அதன்பின்னர், வெளியே வந்த அவர்கள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவர்களைத் தடுத்து காப்பாற்றினர். டி.ஜி.பி. அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றும் இடத்தில் சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்படுவதாகவும், அதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

இதுதொடர்பாக விளக்கமளித்த தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ``'தீக்குளிக்க முயன்ற கணேஷ் மற்றும் ரகு என்ற இரு காவலர்களும், பணியில் ஒழுக்கமின்மையாக இருந்ததாலே டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். காவலர் கணேஷ், 7 முறை தவறு செய்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரகு என்பவர் சென்னையில் ஒரு முறை தவறு செய்ததாக நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்’’ என்று விளக்கமளித்தார். இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது தற்கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒருநாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், ஜாமீன் கோரி கைது செய்யப்பட்ட காவலர்கள் தரப்பில் எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த எழும்பூர் 13-வது நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.